மகாராஷ்டிர பாஜக எம்.எல்.ஏ கோபிசந்த் படல்கர், இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்லக்கூடாது என்ற தனது அறிவுரையால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிராவின் பீட் நகரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் “ கல்லூரி செல்லும் இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டாம், வீட்டிலேயே யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஏனெனில், ஒரு சதி நடந்து வருகிறது, யாரை நம்புவது என்று அவர்களுக்குத் தெரியாது..” என்று அவர் கூறினார்.
மேலும் “ஒரு பெரிய சதி நடக்கிறது, அதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். மிகவும் நல்லவர் அல்லது நன்றாகப் பேசுபவர்களால் ஏமாறாதீர்கள்,” என்று கோபிசந்த் படால்கர் கூறினார்.. அதாவது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்து பெண்களை கவர்ந்திழுப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்..
தொடர்ந்து பேசிய அவர் “ ஜிம்மில் தங்கள் பயிற்சியாளர் யார் என்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் உள்ள இளம் பெண்கள் ஜிம்மிற்குச் சென்றால், அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். பெண்கள் வீட்டிலேயே யோகா பயிற்சி செய்ய வேண்டும், ஜிம்மிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அவர்கள் உங்களை ஏமாற்றி அநீதி இழைக்கிறார்கள்,” என்று கூறினார்.
அடையாள விவரங்கள் இல்லாமல் கல்லூரிகளுக்குச் செல்லும் இளைஞர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளே நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். “நாம் ஒரு வலுவான தடுப்பு முறையை உருவாக்க வேண்டும்,” என்று சாங்லி மாவட்டத்தின் ஜாட் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. கூறினார்.
கோபிசந்த் படல்கர் தனது தவறான கருத்துகளால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது இது முதல் முறை அல்ல. செப்டம்பரில் NCP-SP (தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் சந்திர பவார்) தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் அவரது பெற்றோர் குறித்து அவர் இழிவான கருத்துக்கள் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கட்சியினர் போராட்டங்களை நடத்தினர் மற்றும் பதல்கர் மற்றும் சரத் பவாரின் உருவ பொம்மைகளை எரித்தனர், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : உச்ச நீதிமன்றத்தின் போலி உத்தரவின் மூலம் டிஜிட்டல் கைது; ரூ. 1.5 கோடியை இழந்த தம்பதி! பகீர் சம்பவம்!



