இரவு நேரங்களில் போதுமான மற்றும் ஆழ்ந்த தூக்கம் மனநிலை, நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் வேலைத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தூக்கம் நமது உடல் எடை மற்றும் வளர்சிதை மாற்றத்தில் (Metabolism) ஏற்படுத்தும் தாக்கம் பற்றிப் பலரும் அறிவதில்லை. உணவும், உடற்பயிற்சியும்தான் ஆரோக்கியத்தின் தூண்கள் என்றாலும், தூக்கம்தான் நமது பசி உணர்வு, உடலில் ஆற்றல் செலவு, கொழுப்புச் சேமிப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றச் சமநிலையை ஒழுங்குபடுத்தும் ஒரு சக்தி வாய்ந்த உயிரியல் செயல்பாடாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தூக்கமின்மை ஏற்படுத்தும் ஹார்மோன் குழப்பம் :
தூக்கத்தின் அளவு அல்லது தரம் குறைவாக இருக்கும்போது, நமது உடல் அமைப்புகள் கட்டுப்பாட்டை இழக்கின்றன. இது பசியை அதிகரிக்கிறது, கலோரிகள் எரிக்கப்படுவதைச் மெதுவாக்குகிறது மற்றும் உடல் எடை அதிகரிக்கச் சாதகமான சூழலை உருவாக்குகிறது.
பசியை அதிகரிக்கும் ஹார்மோன்கள் :
மோசமான தூக்கம் காரணமாக பசியைத் தூண்டும் ஹார்மோனான கிரெலின் (Ghrelin) அதிகரிக்கிறது. அதே நேரத்தில், பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனான லெப்டின் (Leptin) குறைகிறது. இதனால், உடலுக்குக் கூடுதல் கலோரிகள் தேவையில்லாதபோது கூடப் பசி ஏற்படுவதாக மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மைதான் தூக்கமின்மையின் ஆரம்ப மற்றும் வலுவான வளர்சிதை மாற்ற விளைவுகளில் ஒன்றாகும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
கொழுப்பு சேமிப்பை தூண்டும் ரசாயன எதிர்வினை :
போதுமான தூக்கமின்மை நமது இன்சுலின் உணர்திறனைப் பலவீனப்படுத்துகிறது. இதனால், நாம் உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸை (சர்க்கரை) ஆற்றலாக மாற்றும் உடலின் திறன் குறைகிறது. இதன் விளைவாக, பயன்படுத்தப்படாத குளுக்கோஸ் கொழுப்புச் சேமிப்பை நோக்கிச் செலுத்தப்படுகிறது. இதுவே தொப்பை, உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
மோசமான தூக்கத்தினால் கார்டிசோல் (Cortisol – மன அழுத்த ஹார்மோன்) அளவும் உயர்கிறது. இது உடலை கொழுப்புச் சேமிப்பு நிலைக்குத் தள்ளுவதுடன், தைராய்டு செயல்பாட்டைச் சீர்குலைக்கிறது. இதனால், உடலின் கலோரிகளை எரிக்கும் திறன் குறைகிறது. இதன் விளைவாக, சாதாரண உணவுப் பழக்கங்கள் கூட எடை அதிகரிக்க வழிவகுக்கின்றன.
பலர் தங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைச் சரியாகச் செய்தாலும், எடை குறையாமல் இருப்பதுண்டு. இதற்கு மூல காரணம், அவர்களின் மோசமான தூக்கமே. சீரான, ஆழ்ந்த தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல; அது ஒரு வளர்சிதை மாற்றக் கருவி (Metabolic Tool). எனவே, ஆரோக்கியமான எடை மற்றும் நீடித்த நல்வாழ்வைப் பராமரிக்க, பின்வரும் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.
* 7 முதல் 9 மணிநேரம் வரை தடையற்ற தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
* தினமும் நிலையான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.
* படுக்கைக்கு செல்வதற்கு முன் மொபைல் போன் பயன்படுத்துவது மற்றும் அதிக உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* சரியான தூக்கம் நமது உடலின் வளர்சிதை மாற்ற அமைப்பை மீட்டெடுத்து, ஹார்மோன்கள், குளுக்கோஸ் சமநிலை, பசி மற்றும் கொழுப்பை எரிக்கும் திறனை நிர்வகிக்க உதவுகிறது.
Read More : தம்பதிகளே..!! குளிர்காலத்தில் பாலியல் உறவை மேம்படுத்த இதை பண்ணுங்க..!! நிபுணர்கள் கொடுத்த சூப்பர் டிப்ஸ்..!!



