நாம் சுவாசிக்கும் காற்றின் நறுமணம் நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, செரிமான மண்டலத்தைச் சீராக இயங்க வைக்கும் ஆற்றல் கொண்டது. அந்த வகையில், செயற்கை நறுமணங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் வீட்டிலேயே நறுமண ஸ்ப்ரே தயாரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம்.
இந்த இயற்கை நறுமண ஸ்ப்ரே தயாரிக்கத் தேவையான பொருள்கள் மிகவும் எளிமையானவை. ஒரு ஸ்ப்ரே பாட்டில், நல்ல நறுமணம் கொண்ட பன்னீர் (Rose Water) 2 ஸ்பூன், ஜவ்வாது 2 ஸ்பூன் மற்றும் இரண்டு துண்டுகள் பச்சை கற்பூரம் ஆகியவை போதுமானது. ஒரு சுத்தமான கிண்ணத்தில் பன்னீர் மற்றும் ரோஸ் வாட்டரை எடுத்துக்கொண்டு, அதில் பச்சை கற்பூரத்தை நன்கு பொடி செய்து சேர்க்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு ஜவ்வாது பொடியையும் சேர்த்து, அனைத்துப் பொருள்களும் ஒன்றுடன் ஒன்று நன்கு இணையும் வரை கலக்க வேண்டும். இந்தக் கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றினால், ரசாயனம் இல்லாத ‘ஹோம் மேட்’ நறுமண ஸ்ப்ரே தயார்.
இந்த நறுமண கலவையை வீட்டின் பல்வேறு இடங்களிலும் பயன்படுத்தலாம். குறிப்பாக வரவேற்பறை, ஜன்னல் திரைச்சீலைகள் மற்றும் சோபா உறைகள் மீது தெளிக்கும்போது, அந்த நறுமணம் இரண்டு நாட்கள் வரை நிலைத்து நிற்கும். ஒரு காலத்தில் ஆடம்பரமான வாசனை திரவியங்கள் இல்லாதபோது, ஜவ்வாதுதான் பலருக்கும் பிரதான நறுமணமாக இருந்தது. எனவே, இதனைப் பாதுகாப்பான ஒரு ‘பாடி ஸ்ப்ரே’ (Body Spray) போல ஆடைகளிலும் லேசாக தெளித்துக் கொள்ளலாம்.
இத்தகைய இயற்கை வாசனை திரவியங்கள் வீட்டின் சூழலை அமைதிப்படுத்துவதுடன், மன அழுத்தத்தை குறைத்து மறைமுகமாக நமது செரிமான ஆரோக்கியத்திற்கும் (Digestive Health) துணைபுரிகின்றன. அதிக செலவில்லாமல், நம் முன்னோர்கள் பயன்படுத்திய இந்த எளிய வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் வீட்டை மணமணக்க செய்வதுடன், ஆரோக்கியமான ஒரு சூழலையும் உருவாக்க முடியும்.



