தமிழக வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் நிலவி வந்த காலதாமதத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பயிர்க்கடனுக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, அதே நாளில் கடன் தொகையை வழங்கும் புரட்சிகரமான திட்டம் இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம், தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. கடனை உரியக் காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற சலுகையும் உண்டு. முன்னதாக, பயிர்க்கடனுக்காக விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை சரிபார்க்கவும், ஒப்புதல் அளிக்கவும் சுமார் 15 நாட்களுக்கும் மேலாக காலதாமதம் ஏற்பட்டது. இதனால் சாகுபடி மற்றும் விதைப்பு காலங்களில் உரிய நேரத்தில் முதலீடு கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்தச் சிக்கலைத் தீர்க்கவே விண்ணப்பித்த அன்றே கடன் என்ற அதிரடி முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 5 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற முடியும். இதற்காக இ-சேவை மையங்கள் அல்லது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் உறுப்பினர் எண், ஆதார், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் நிலத்தின் பட்டா, சிட்டா ஆகியவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, சங்க அதிகாரிகள் தமிழ் நிலம் மற்றும் டி.என்.கிரெயின்ஸ் (TN-GRAINS) இணையதளங்கள் வாயிலாக நிலம் மற்றும் பயிர் விவரங்களை சரிபார்ப்பார்கள். கூட்டுறவு சங்கச் செயலரின் ஒப்புதலுக்குப் பிறகு, அடுத்த அரை மணி நேரத்திற்குள் மாவட்ட மத்திய வங்கியின் கிளை மேலாளர் சரிபார்ப்புக்கு விண்ணப்பம் செல்லும். அங்கு ஒப்புதல் கிடைத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே கடன் தொகை விவசாயியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகியோர் கணினி வாயிலாகவே தகவல்களை உறுதி செய்வதால், தேவையற்ற அலைச்சல்கள் தவிர்க்கப்படுகின்றன. விதைப்புப் பணிகளைத் திட்டமிட்ட நேரத்தில் மேற்கொள்ள இந்தப் புதிய நடைமுறை பெரும் உதவியாக இருக்கும் என்பதால், தமிழக விவசாயிகள் இதனை நிம்மதியுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்றுள்ளனர். வேளாண்மைத் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மாற்றம், விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Read More : பொங்கல் பரிசுத்தொகை ரூ.3,000..!! நாளையே கடைசி..!! வெளியூரில் இருப்பவர்கள் என்ன செய்யலாம்..?



