அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த ஏர் இந்தியா AI171 விமான விபத்து, நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கிய துயரச் சம்பவமாக நினைவில் நிற்கிறது. போயிங் 787–8 வகை விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பயணித்திருந்த நிலையில், விபத்துச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பேரிடரைத் தொடர்ந்து, விமானப் பாதுகாப்பில் உலகளவில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், துபாயில் உள்ள BITS பிலானி தொழில்நுட்ப நிறுவனம் சேர்ந்த இரு இளம் பொறியாளர்கள் ஆஷெல் வசீம் மற்றும் தர்சன் ஸ்ரீனிவாசன் உருவாக்கியுள்ள புதுமைத் திட்டம் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘புராஜெக்ட் ரீபர்த்’ எனப்படும் இந்த பாதுகாப்பு அமைப்பு, சாதாரண பாதுகாப்பு கருவிகளை விட மிகப் பெரும் முன்னேற்றம் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதற்காகவே உலகளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் டைசன் விருதுக்கு இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு நவம்பர் 5 அன்று வெளியாக உள்ளது.
எப்படி செயல்படுகிறது?
* இந்த அமைப்பு விமானத்தின் உயரம், வேகம், திசை, தீவிபத்து, விமானியின் எதிர்வினை போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்கும்.
* AI தொழில்நுட்பம் 3,000 அடி உயரத்திற்குக் கீழே தவிர்க்க முடியாத விபத்து சாத்தியக்கூறைக் கண்டறிந்தவுடன், தானாகவே செயல்படும்.
* இரண்டு வினாடிகளில் கூட குறைவான நேரத்தில், விமானத்தின் முன், நடு மற்றும் பின்புறங்களில் இருந்து பெரிய பாதுகாப்பு கேடயங்கள் (ராட்சத ஏர்பேக்குகள்) விரிவடைகின்றன.
* பல அடுக்குகளைக் கொண்ட துணியால் ஆன இக்கேடயங்கள், விமானத்தின் பிரதான பகுதியைச் சுற்றி பாதுகாப்பு கவசமாக மாறுகின்றன.
இந்த விபத்து உயிர்வாழும் அமைப்பு, எதிர்காலத்தில் விமான விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் தடுக்க உதவும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதன் வெற்றி உலக விமானப் பாதுகாப்பு துறைக்கு ஒரு புதிய யுகத்தைத் தொடங்கக்கூடும் என கருதப்படுகிறது.



