சொத்து தொடர்பான உரிமைகள் மற்றும் பரிமாற்ற விவரங்களை தெரிந்துகொள்வதில் பொதுமக்களுக்கு இருந்த சிரமங்களை போக்கும் வகையில், தமிழக அரசின் வருவாய்த்துறை ஒரு புதிய ஆன்லைன் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பத்திரப்பதிவுத் துறையின் வில்லங்கச் சான்றிதழ் போலவே, ஒரு சொத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள உதவும் வகையில், ‘பட்டா வரலாறு’ (Patta History) என்ற இந்தச் சேவை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது.
முன்பெல்லாம் சொத்துக்குப் பட்டா பெறுவது என்பது மிகவும் கடினமான ஒரு நடைமுறையாக இருந்தது. ஆனால், தற்போது பொதுமக்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலமாக எளிதாக பட்டா பெற முடிகிறது. அதேபோல, பத்திரப்பதிவு செய்யப்பட்டவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு கூட உடனடியாகப் பட்டா மாறுதல் செய்யப்படுகிறது.
தற்போது நடைமுறையில், ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளர் யார் என்ற விவரத்தை வருவாய்த்துறை மூலமாகவும், பட்டா மூலமும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், ஒரு சொத்தின் முழு உரிமை வரலாறு, அதாவது, ‘யார் தற்போதைய உரிமையாளர்?’, ‘இதற்கு முன்பு யார் பெயரில் சொத்து இருந்தது?’, ‘இந்தச் சொத்து வங்கியில் அடமானத்தில் உள்ளதா?’, ‘சொத்தில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன?’ போன்ற அனைத்து விவரங்களையும் வில்லங்க சான்றிதழ் மூலமே தெரிந்துகொள்ள முடிந்தது.
இந்த சூழலில், வருவாய்த்துறை வழங்கும் பட்டா மூலமும் பத்திரப்பதிவுத் துறை வில்லங்க சான்றிதழுக்கு இணையான விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தற்போது ‘பட்டா வரலாறு’ என்ற புதிய சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்தச் சேவை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்கவிருப்பதால், ஒரு சொத்தின் முழுப் பரிமாற்றம் மற்றும் உரிமைகோரல் விவரங்களை மக்கள் இனி எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
Read More : தாம்பத்திய உறவை இனிக்க செய்யும் 7 அற்புதமான உணவுகள்..!! தம்பதிகளே கட்டாயம் இதை சாப்பிடுங்க..!!



