சென்னையில் 15 வயது பள்ளி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சினிமா துணை நடிகை உட்பட 3 பேரை போலீசர் கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள 100 அடி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வந்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசர், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 9ஆம் வகுப்பில் பயிலும் 15 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். பின்னர், சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அரசு சிறுவர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில், சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால், தாய் மற்றொரு திருமணம் செய்து கணவருடன் சென்றுவிட்டார். இதனால், யாரும் இல்லாமல் இருந்த சிறுமி, தனது தாயின் தோழியான அஞ்சலி என்ற பெண்ணின் பாதுகாப்பில் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார்.
ஆனால், அஞ்சலி சிறுமியை மிரட்டி, ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். அஞ்சலிக்கு துணையாக இருந்தது, ஆந்திராவைச் சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா மற்றும் நாகராஜ் ஆகியோர்கள் தான் என்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதே வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பாலியல் தொழிலில் சிக்கியதாகக் கூறப்படும் பெண்கள் மீட்கப்பட்டு, மயிலாப்பூரில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்தப் பட்டியலில், 26 பேர் இருந்த நிலையில், வட இந்தியாவைச் சேர்ந்த ஏழு பெண்கள் தப்பிச் சென்றனர். தற்போது, மயிலாப்பூர் போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read More : அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார் புஜாரா..!! ரசிகர்கள் ஷாக்..!!