இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை சூழலில், உடல் ஆரோக்கியத்தை தற்காத்துக் கொள்ள நடைப்பயிற்சி ஒன்றே எளிய மற்றும் மிகச்சிறந்த வழியாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், நடைப்பயிற்சி என்று வந்துவிட்டாலே பலருக்கும் எழும் முதல் கேள்வி, “எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?” என்பதுதான்.
“குறைந்தது ஒரு மணி நேரமாவது வியர்க்க விறுவிறுக்க நடந்தால்தான் பலன் கிடைக்கும்; இல்லையென்றால் நடப்பதே வீண்” என்று சொல்லும் அரைகுறை அறிஞர்களின் பேச்சைக் கேட்டு, நேரம் இல்லாத பலரும் நடைப்பயிற்சியையே கைவிட்டு விடுகின்றனர். ஆனால், உண்மை நிலை முற்றிலும் வேறானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
15 நிமிட நடைப்பயிற்சி போதுமா..?
அதிக நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கும், உடல்நிலை காரணமாகத் தொடர்ச்சியாக நடக்க முடியாதவர்களுக்கும் மருத்துவ உலகம் ஒரு நற்செய்தியை வழங்குகிறது. ஒரு மணி நேரம் நடப்பது கூடுதல் நன்மைகளைத் தரும் என்பது உண்மைதான் என்றாலும், ஒரு நாளைக்கு 15 முதல் 30 நிமிடங்கள் ஒதுக்கினால் கூட அது இதய ஆரோக்கியத்தில் மிகப்பெரிய நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும். எவ்வளவு அதிக நேரம் நடக்கிறோமோ அவ்வளவு நல்லது, அதே சமயம் “கொஞ்சமாக நடப்பதும் கூட ஆரோக்கியத்திற்கு உரம் சேர்க்கும்” என்பதே மருத்துவர்களின் அழுத்தமான கருத்தாகும்.
நேரத்தைப் பிரித்து நடப்பதால் கிடைக்கும் பலன்கள் :
தொடர்ச்சியாக அரை மணி நேரம் நடக்க நேரமில்லாதவர்கள், காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளாகப் பிரித்து, தலா 15 நிமிடங்கள் நடக்கலாம். இவ்வாறு நடைப்பயிற்சியைப் பிரித்து மேற்கொள்வது செரிமான மண்டலத்தைச் சீராக்க உதவுகிறது. குறிப்பாக, உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென அதிகரிப்பதைத் தடுத்து, அதனைச் சீராக வைக்க உதவுகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் உடல் தளர்ச்சி மற்றும் சோர்வைப் போக்க, இடையில் எடுத்துக் கொள்ளும் இத்தகைய சிறு நடைப்பயிற்சிகள் ஒரு ‘பூஸ்டர்’ போலச் செயல்படுகின்றன.
உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றத் திட்டம் :
நடைப்பயிற்சி என்பது ஒரு கடமையாக இல்லாமல், உங்கள் வாழ்வியலோடு கலந்த ஒன்றாக இருக்க வேண்டும். வேலை நாட்களில் நேரம் குறைவாக இருப்பவர்கள் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டும் நடக்கலாம். விடுமுறை நாட்களில் அல்லது வார இறுதி நாட்களில் மட்டும் நேரத்தை அதிகரித்து ஒரு மணி நேரம் வரை நடக்கலாம். இந்த ‘கலவையான நடைப்பயிற்சி’ (Hybrid Walking Routine) முறையானது, உடலின் மெட்டபாலிசத்தைச் சீராக வைத்திருப்பதுடன், உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் பெரிதும் உதவுகிறது.
எனவே, “நேரம் இல்லை” என்ற காரணத்தைச் சொல்லி நடைப்பயிற்சியைத் தள்ளிப்போடாமல், உங்களால் முடிந்த 15 நிமிடங்களிலேயே ஆரோக்கியமான பயணத்தைத் தொடங்குங்கள். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களை நோயற்ற வாழ்வை நோக்கி அழைத்துச் செல்லும்.



