2026-ஆம் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், பலரும் தங்களின் முதல் இலக்காக (Resolution) உடல் எடையை குறைப்பதையே வைத்திருப்பார்கள். ஆனால், குளிர்காலச் சூழலும், அதனால் ஏற்படும் உடல் சோர்வும் இந்த இலக்கை எட்டுவதற்குப் பெரும் தடையாக அமைகின்றன. கடும் குளிரில் ஜிம்மிற்குச் சென்று வியர்க்க விறுவிறுக்கப் பயிற்சி செய்ய தயங்குபவர்களுக்கு, வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலமே எடையைக் கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் வழிகாட்டுகின்றனர்.
குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால், நமது உடலின் உயிரியல் கடிகார சுழற்சி (Circadian Rhythm) மாறி, அதிக சோர்வையும் பசியையும் தூண்டுகிறது. இத்தகைய சூழலில், கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை விட, நாள் முழுவதும் உடல் இயக்கத்துடன் இருப்பதே (Physical Activity) சிறந்தது. ஜிம்மிற்குச் செல்ல முடியாவிட்டாலும், லிஃப்டை தவிர்த்துப் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது, அவ்வப்போது எழுந்து நடப்பது போன்ற சிறிய செயல்பாடுகள் வளர்சிதை மாற்றத்தைச் சீராக வைத்திருக்க உதவும்.
உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, புரதம் நிறைந்த சூடான உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பருப்பு, முட்டை, பனீர் போன்ற உணவுகள் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும். குளிர்காலத்தில் தாகம் எடுக்காவிட்டாலும், போதிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். தாகத்தை ஆற்றுவதற்கு மூலிகை தேநீர் அல்லது சூப் வகைகளை தேர்வு செய்யலாம். மேலும், மன அழுத்தத்தை குறைப்பதற்கான சுவாசப் பயிற்சிகளும், சீக்கிரமாக இரவு உணவை முடிக்கும் பழக்கமும் வயிற்றில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.
மொத்தத்தில், குளிர்காலத்தில் உடலை வருத்திக் கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை விட, காலநிலைக்கு ஏற்ப மென்மையான மற்றும் தொடர்ச்சியான வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதே ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.



