இந்தியாவில் விளிம்புநிலை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குப் பாதுகாப்பு கவசமாக விளங்கும் பொது விநியோகத் திட்டத்தில் (PDS), தற்போது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றம் புகுத்தப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் ரேஷன் கடைகளில், அவ்வப்போது எடை குறைவு மற்றும் பொருட்கள் கள்ளச்சந்தைக்கு மாற்றப்படுவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய முறைகேடுகளை வேரோடு அகற்றவும், விநியோக முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவும் மத்திய அரசு தற்போது ‘தானிய ஏடிஎம்’ இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக குஜராத் மாநிலத்தில் ‘அன்னபூர்த்தி’ என்ற பெயரில் அமைந்துள்ள இந்த இயந்திரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார். இந்த இயந்திரத்தின் சிறப்பம்சமே அதன் வேகம் தான். பொதுமக்கள் தங்கள் கைரேகை அல்லது பிரத்யேக கார்டை பயன்படுத்திய 35 விநாடிகளுக்குள், எவ்வித மனித தலையீடும் இன்றி 25 கிலோ வரையிலான அரிசி அல்லது தானியங்களை துல்லியமான எடையில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் மூலம், ரேஷன் கடைகளில் ஊழியர்கள் செய்யும் எடை குறைப்பு புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ரேஷன் கடைகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயங்கும் நிலையில், இந்த ஏடிஎம் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தனிப்பட்ட டிஜிட்டல் கார்டுகள் வழங்கப்படும். இதனைப் பயன்படுத்தி, மக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் தானியங்களை எடுத்துக்கொள்ளலாம்.
“அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருள் விநியோகம் என்பது நூறு சதவீதம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறும். இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடுகளை தடுத்து, தகுதியுள்ள பயனாளிகளுக்குச் சேர வேண்டிய பொருட்கள் முழுமையாகச் சென்றடைவதை இது உறுதி செய்கிறது. குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
Read More : “இது சென்சிட்டிவான செண்டிமெண்ட்.. யாரும் அசைக்க முடியாது..” கண்கலங்கி எமோஷ்னல் ஆன விஜய்..!



