கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளக்காரன்பட்டியில், காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் பி. ஃபார்ம் படித்து வரும் வினிதா (21) என்ற அந்த மாணவி, உடல்நலக் குறைவு காரணமாக தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில், அவருடைய முன்னாள் காதலன் ரஞ்சித், வினிதா இருந்த அறையின் ஜன்னல் வழியாக கொதிக்கும் எண்ணெயை அவர் மீது ஊற்றியுள்ளார்.
எண்ணெய் பட்டதால் தீக்காயம் அடைந்த வினிதா, வலி தாங்க முடியாமல் அலறியதால், ஓடிவந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அந்த மாணவிக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். காதலை மறுத்த காரணத்துக்காக, ஒரு இளம் பெண் மீது முன்னாள் காதலன் நடத்திய இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : பால், தயிர் சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்..!! தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன..?



