பெங்களூருவைச் சேர்ந்த ரிது மகேஷ்வரி என்ற பெண், தன் அனுமதியில்லாமல் ரூ.90,900 மதிப்புள்ள மூன்று பரிவர்த்தனைகள் நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இவை அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாலை 3.24 மணி முதல் 4.03 மணி வரை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
ரிது மகேஷ்வரி தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், ரூ.30,300 வீதம் 3 முறை, அவரது வங்கி கணக்கிலிருந்து பிடிக்கப்பட்டன. அவர் எந்த OTP (ஒற்றை முறை கடவுச்சொல்) அல்லது அங்கீகாரக் குறியீடும் பகிரவில்லை என்றும், எந்த பரிவர்த்தனையையும் தானாக அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதாவது, அவரது அனுமதியின்றி பணம் பிடிக்கப்பட்டது.
வங்கியின் பதில்:
வங்கி தரப்பில், OTP பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பரிவர்த்தனைகள் செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் ரிது மகேஷ்வரி, OTP தன்னால் பயன்படுத்தப்படவில்லை என்பதால் இது வங்கியின் பாதுகாப்பு குறைபாடு எனக் கூறியுள்ளார்.
போலீஸ் நடவடிக்கை:
அவர் அளித்த புகாரின் பேரில், அக்டோபர் 3, 2025 அன்று மைகோ லேஅவுட் போலீஸ்
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ன் பிரிவு 66(C) (அடையாள திருட்டு) மற்றும் 66(D) (மோசடி மற்றும் போலி அடையாளம் பயன்படுத்தல்) கீழ் FIR பதிவு செய்துள்ளது. புகாரில், பரிவர்த்தனைகள் UPI அடிப்படையிலான கட்டண தளத்தின் மூலம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிதுவின் நடவடிக்கை:
அதிகாலை 4.37 மணிக்கு வங்கிக்கு தகவல் அளித்தார். 7.20 மணிக்குள் வங்கி புகாரை பதிவு செய்தது. அதற்கு முன்பே 4.09 மணிக்கு, வங்கியிலிருந்து “சந்தேகமான செயல்பாடு கண்டறியப்பட்டது” என கூறிய தானியங்கிய மின்னஞ்சல் வந்தது. அதன்படி, வங்கி அவரது கார்டை தற்காலிகமாக முடக்கியது. அவரது புகாரின் பேரில், 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண் மூலம் புகார் பதிவு செய்யப்பட்டது.
ரிது மகேஷ்வரி இதுகுறித்து பேசிய போது “நான் சம்பவத்தை சில மணி நேரங்களுக்குள், ரிசர்வ் வங்கியின் மூன்று நாள் புகார் நேர வரம்புக்குள் தெரிவித்தேன். ஆனால் வங்கி இன்னும், எவ்வாறு என் அனுமதி இல்லாமல் பரிவர்த்தனை நடந்தது என்பதை விளக்கவில்லை,” என தெரிவித்தார்.



