திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் சென்னையில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த போது, திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் காணாமல் போன மகளை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி அந்த பெண்ணின் தந்தை கருப்பண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாயமான பெண்ணை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி, இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணாமல் போனதாக கூறப்பட்ட இளம்பெண் காணொலி வாயிலாக நீதிபதிகள் முன்னிலையில் ஆஜராகினார்.
அவர் கூறுகையில், “சென்னையில் உடன் பணிபுரிந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறேன். என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை” என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், “குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெற்றோர் அவர்களை படிக்க வைக்கின்றனர். காதலிக்கும் பிள்ளைகள் பெற்றோரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கினர்.
மேலும், “காதல் திருமணம் என்பது பங்குச் சந்தை போன்றது; அதில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். மனுதாரரின் மகள் விரும்பியவருடன் செல்வது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் பெற்றோருக்கு முன்பே தகவல் தெரிவித்திருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் மகளை நீதிமன்றத்தில் இவ்வாறு காணொலி வழியாகப் பார்க்க வேண்டிய நிலை வரக்கூடாது” என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, “காதலை எடுத்துச் சொல்லி பெற்றோரை சமாதானப்படுத்த முயற்சித்திருக்கலாம். அதே நேரத்தில், பெற்றோரும் தற்போதைய சமூக மாற்றங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்” எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், அந்த இளம்பெண்ணிடம், “கணவருடன் நேரில் சென்று பெற்றோரை சந்தித்து சமாதானம் செய்யுங்கள்” என்று அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, பெற்றோர் தரப்பில், “நாங்கள் வயதானவர்கள். எங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை” என்று கண்ணீருடன் தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள், “உங்கள் மகள் உரிய வயதை எட்டிவிட்டார். அவர் திருமணம் செய்து கணவருடன் சென்றுவிட்டார். இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.



