தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது தனது வரலாற்றிலேயே சந்தித்திராத ஒரு இக்கட்டான உட்கட்சிப் பூசலில் சிக்கியுள்ளது. கட்சியின் தலைமை அதிகாரம் மற்றும் அடையாள சின்னமான ‘மாம்பழம்’ யாருக்குச் சொந்தம் என்ற சட்டப் போராட்டம், டெல்லி உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விளக்கத்தில், ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸே கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக கருதப்படுவதாகவும், அதனால் மாம்பழம் சின்னம் அவருக்கே சேரும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது கட்சியின் நிறுவனராகவும், இத்தனை ஆண்டுகாலம் கட்சியை வழிநடத்தி வருபவருமான ராமதாஸுக்கு சட்ட ரீதியான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சின்னம் தொடர்பான இந்த இழுபறி அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், ஒருவிதமான கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸின் பெயரையும், மாம்பழம் சின்னத்தையும் மட்டுமே நம்பி வாக்களிக்கும் ஒரு பெரும் வாக்கு வங்கி பாமகவுக்கு உண்டு. இப்போது சட்ட சிக்கல்களால் அந்தச் சின்னத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, கட்சியின் தேர்தல் வெற்றியைப் பாதிக்குமோ என்ற அச்சத்தை நிர்வாகிகள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
ஒருவேளை மாம்பழம் சின்னம் கிடைக்காமல் போனால், ராமதாஸ் தரப்பு சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம். இது தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளுடன் போட்டியிடுவதை இன்னும் சவாலானதாக மாற்றும். சின்னம் தொடர்பான இந்தச் சிக்கல், பாமகவின் கூட்டணிக் கணக்குகளையும் தலைகீழாக மாற்றியுள்ளது. பெரிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசும்போது, சின்னம் இல்லாத பலவீனத்தை சாதகமாகப் பயன்படுத்தி மற்ற கட்சிகள் பாமகவை ஒடுக்க முயலலாம்.
தங்களின் அரசியல் பிடியை தக்கவைக்கப் போராட வேண்டிய நிலையில் உள்ள ராமதாஸ் தரப்பு, கட்சியின் கட்டமைப்பை சிதையாமல் காப்பதற்கும், தொண்டர்களை ஒன்றிணைப்பதற்கும் தற்போது மல்லுக்கட்டி வருகிறது. சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், இந்தத் தேர்தல் சோதனையை ராமதாஸ் எவ்வாறு கடக்கப் போகிறார் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



