பூமியின் இன்றைய 24 மணி நேர நாள்சுழற்சி மெல்ல நீளமாகி வருகிறது. இந்த வேகத்தில் மாற்றம் தொடர்ந்தால், சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் 25 மணி நேரமாக மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. சந்திரனின் ஈர்ப்பு விசை மற்றும் பிற கோள்மண்டல மாற்றங்களால் பூமியின் சுழற்சி மெல்லத் தளர்வதே இதற்குக் காரணம்.
இந்த மாற்றம் மனித வாழ்நாளில் உணர முடியாத அளவுக்கு மெதுவாக நடக்கிறது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் விநாடியின் மிகச் சிறிய பாகங்கள் மட்டுமே கூடுகின்றன. ஆனால் இந்த சிறிய மாற்றங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளில் சேர்ந்து, ஒரு நாளின் நீளத்தையே மாற்றிவிடுகின்றன.
25 மணி நேர நாள் : நேரக் கணக்கீட்டுடன் தொடர்பு
நாம் இன்றும் பயன்படுத்தும் கடிகார முறைகள், பூமி சூரியனை ஒட்டி சுழலும் “சோலார் டே” (solar day) என்ற அடிப்படையில் அமைந்தவை. இது, தொலைவிலுள்ள நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட “சிடீரியல் டே” (sidereal day) விட சிறிது நீளமானது. ஏனெனில், பூமி தன்னைத்தானே சுழலும் போதே சூரியனைச் சுற்றியும் சுழல்கிறது.
விஞ்ஞான கணக்கீடுகளின் படி, சுமார் 200 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நாள் 25 மணி நேரமாக மாறலாம். ஆனால் இந்த மதிப்பீட்டில் சிறிதளவு மாற்றம் இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பூமியின் சுழற்சி வேகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. வரலாற்றில், ஒரு வருடத்தில் அதிக நாட்களும், ஒரு நாளின் நீளம் வேறுபட்ட காலங்களும் இருந்துள்ளன.
ஏன் பூமியின் சுழற்சி மெல்ல தளர்கிறது?
பூமி – சந்திரன் இடையிலான தொடர்புதான் இதற்கான முக்கிய காரணம். சந்திரனின் ஈர்ப்பு விசை கடல்நீரை இழுத்து, அலைகளை உருவாக்குகிறது. இந்த அலைகள் சந்திரனின் நேரடியான இடத்திலிருந்து சிறிது முன்பாக உருவாகி, பூமியின் சுழற்சிக்கு எதிராக ஒரு சிறிய “பிரேக்” போல செயல்படுகின்றன. இதனால் பூமியின் சுழற்சி வேகம் மெல்ல குறைகிறது.
நாசா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.. அதில் “சந்திரனின் ஈர்ப்பு விசை கடல்களை சற்றே புடைப்பாக்குகிறது; இந்த தொடர்பு ஒரு பிரேக் போல செயல்பட்டு, பூமியின் சுழற்சியை மெல்லக் குறைக்கிறது” என தெரிவித்துள்ளது.
பனிப்பாறைகள் உருகுதல், கடல்களில் நீர்மாசுகள் நகர்தல், பூமியின் உள்ளகமான மையம் மற்றும் மேண்டிலின் இயக்கங்கள் போன்றவை கூட சுழற்சியில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவை மிகக் குறைந்த அளவிலானவை.
பூமியின் சுழற்சி ஒவ்வொரு நூற்றாண்டிலும் சுமார் 1.7 மில்லி விநாடிகள் அளவுக்கு மட்டுமே நீளமாகிறது. மனித வாழ்க்கையில் இதை உணர முடியாது. ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளில் இதுவே ஒரு நாளில் பல மணி நேரம் கூடும் அளவுக்கு மாறிவிடும்.
பூமியின் ஆழ்ந்த கடந்த காலத்துடன் ஒப்பிடல்
பாறைகள் மற்றும் படிமங்கள் (fossils) காட்டும் ஆதாரங்கள், பூமியின் பழைய நாட்களில் ஒரு நாள் இன்றையதை விட மிகவும் குறைவாக இருந்ததை வெளிப்படுத்துகின்றன.
MIT-இன் இயற்பியல் உதவிப் பேராசிரியர் சாரா மில்ஹாலண்ட் இதுகுறித்து பேசிய போது “பூமியின் வரலாற்றில், ஒரு நாள் இன்றையதை விட குறுகியதும் நீளமானதும் இருந்த காலங்கள் பல இருக்கின்றன. சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் சுமார் 19 மணி நேரம் மட்டுமே இருந்தது.” என்று தெரிவித்தார்..
பண்டைய பவளங்கள் மற்றும் அலைச் சிதைவுகள் காட்டுவது என்னவென்றால், நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு வருடத்தில் 400-க்கும் மேற்பட்ட நாட்கள் இருந்தன. அப்போது ஒவ்வொரு நாளும் சுமார் 21 மணி நேரம் மட்டுமே நீளமாக இருந்தது.
பூமி உருவான ஆரம்ப காலத்தில், ஒரு நாள் 10 மணி நேரத்துக்கும் குறைவாக இருந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சில காலகட்டங்களில் ஒரு நாள் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக இருந்ததும் உண்டு, ஆனால் அவை நீண்டகாலம் தொடரவில்லை.
மனிதர்களின் நேரக் கணக்கீடு எப்படித் தோன்றியது?
நாம் இன்று பயன்படுத்தும் 24 மணி நேரம், ஒவ்வொரு மணி 60 நிமிடம், ஒவ்வொரு நிமிடம் 60 விநாடிகள் என்ற முறை மிகவும் பிந்தைய வரலாற்றில் உருவானது. சிட்னி வானியல் ஆய்வகத்தின் ஆலோசகர் டாக்டர் நிக் லோம் பேசிய போது “ஒரு நாளை 24 மணி நேரமாகவும், ஒவ்வொரு மணியை 60 நிமிடமாகவும், நிமிடத்தை 60 விநாடியாகவும் பிரிக்கும் முறையின் தோற்றம் மிகவும் சுவாரஸ்யமானது” என்றார்.
இந்த முறை பண்டைய எகிப்தியர்களிடமிருந்து தொடங்கியது. அவர்கள் சூரியக் கடிகாரங்களைப் பயன்படுத்தி பகல் நேரத்தை 10 மணி நேரமாகவும், தொடக்கமும் முடிவிலும் கூடுதல் ஒளி நேரத்தையும் சேர்த்தனர். இரவு நேரத்தை 12 மணி நேரமாகப் பிரித்தனர்.
“இரவு நேரம் 12 மணி நேரமாகப் பிரிக்கப்பட்டது, நட்சத்திரங்களைக் கவனிப்பதன் மூலம். அவர்கள் ‘டிகான்ஸ்’ (decans) எனப்படும் 36 நட்சத்திரக் குழுக்களை வைத்திருந்தனர். ஒவ்வொரு இரவிலும் ஒரு டிகான், முந்தையதை விட 40 நிமிடங்களுக்கு பின் உதயமாகும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது,” என லோம் விளக்கினார்.
இரவில் நேரத்தை அறிய உதவும் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டன. அவை சில சமயம் சவப்பெட்டிகளின் மூடிகளில் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.. இறந்தவர்களும் நேரத்தை அறியவேண்டும் என்பதற்காக! பின்னர் பாபிலோனியர்கள் இந்த முறையை ஏற்று, அடிப்படை-60 (கணக்குமுறையை உருவாக்கி, இன்று நாம் பயன்படுத்தும் நேரக் கணக்கீட்டு முறையை வளர்த்தனர்.
25 மணி நேர நாள் : அச்சப்பட வேண்டுமா?
கால்டெக் பல்கலைக்கழகத்தின் கிரக அறிவியல் பேராசிரியர் கோன்ஸ்டான்டின் படிகின், லைவ் சயின்ஸ்-க்கு அளித்த பேட்டியில், “பூமியின் சுழற்சி வேகம் மிகவும் மெதுவாகத்தான் மாறி வருகிறது. இந்த மாற்றம் வளர்ச்சி (evolution) செயல்முறைகள் எளிதாக ஏற்பேற்கக்கூடிய அளவில்தான் நடைபெறுகிறது. பூமியில் வாழும் உயிரினங்கள் முன்பே பல்வேறு நாள் நீளங்களுக்கு தங்களை மாற்றிக் கொண்டுள்ளன,” என்று விளக்கினார்.
மேலும், “பூமியின் சுழற்சி அல்லது அதன் பாதை வேகத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் கண்கூடாக உணர முடியாத அளவுக்கு சிறியதாகவே இருக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அதனால், எதிர்காலத்தில் நாள் நீளம் மெதுவாக 25 மணி நேரமாக மாறினாலும், மனிதர்கள் நேரத்தை கணக்கிடும் முறைகள் (கடிகாரம், நாட்காட்டி போன்றவை) மூலமாகவே அதனை சரிசெய்து கொள்வார்கள்; வெளிச்சம் அல்லது உடல் ரீதியான மாற்றங்களை நாம் நேரடியாக உணரப்போவதில்லை.
இந்த மாற்றம், “நேரம்” என்பது ஒரு நிலையான விஷயம் அல்ல; பூமி, நிலா போன்றவற்றின் இயக்கங்களின் தாக்கத்தால் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஒரு இயற்கை செயல்முறை என்பதை மட்டுமே நினைவூட்டுகிறது.
Read More : உலகில் ஒரு பள்ளி கூட இல்லாத நாடு பற்றி தெரியுமா? அதற்கான காரணம் இதோ!



