நமது நாட்டில் தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுவது பொதுவான நடைமுறை. ஆனால் சமீபத்தில் வெள்ளி விலை உச்சத்தைக் கடந்த நிலையில், பொதுமக்கள் பலரும் தங்கத்துடன் சேர்த்து வெள்ளியையும் சேமிப்பாக வாங்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான கடன்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த விதிகள் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். வங்கிகள், NBFCகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 6ம் தேதி முதன்முதலாக அறிவிக்கப்பட்ட இந்தச் சீர்திருத்தங்கள், கடன் பெறுவோரின் பாதுகாப்பையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை.
இதுவரை வங்கிகள் தங்கத்தின் மீதுதான் கடன் வழங்கி வந்தன. புதிய விதிகளின் கீழ், வெள்ளிக்கும் கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இது நகைகள், ஆபரணங்கள் அல்லது காயின்கள் என எந்த வடிவிலாக இருந்தாலும் பொருந்தும். ஆனால், ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்ட தங்கம் அல்லது வெள்ளியை மீண்டும் அடமானம் வைக்கவோ, அதற்கு மீண்டும் கடன் பெறவோ முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடன் வாங்கியவர் வட்டியையும் அசலையும் முழுமையாக செலுத்தியதும், வங்கிகள் 7 வேலை நாட்களுக்குள் அடமானம் வைத்திருந்த தங்கம் அல்லது வெள்ளியை திருப்பித் தர வேண்டும். தாமதம் ஏற்பட்டால், ஒரு நாளுக்கு ₹5,000 இழப்பீடாக கடன் வாங்கியவருக்கு வழங்க வேண்டும். அதேபோல், அடகு வைத்திருந்த நகைகளில் சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால், வங்கிகள் முழு இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more: ஒரு அம்பு, 2 இலக்குகள்: சீனா, பாகிஸ்தானுக்கு ஒரே நேரத்தில் வலுவான செய்தி சொன்ன இந்தியா..!



