சமீப காலமாக தெரு நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அதிலும், கடந்த சில வாரங்களாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. நாய் போன்ற விலங்குகள் மனிதனை கடிக்கும் போது, ரேபிஸ் (Rabies) எனப்படும் ஆபத்தான வைரஸ் ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது. இது சிகிச்சை இன்றி விட்டுவிட்டால், மரணத்துக்கு கூட வழிவகுக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். நாய்கள் மட்டுமின்றி மாடு, குதிரை, ஆடு, பூனை, முயல், எலி, பல்லி, காகம் போன்ற விலங்குகளும், பறவைகளும் சில சமயங்களில் ஆபத்தான நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.
அனைத்தையும் செல்லப்பிராணிகளாக வளர்ப்பது இன்று பலருக்கும் வழக்கமாகி விட்ட நிலையில், அவை கடிப்பதாலோ அல்லது நகக் கீறல் பட்டால் கூட அது ஆபத்துக்குரியதாக மாறலாம். நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவை சரியான பராமரிப்பு மற்றும் தடுப்பூசிகள் இல்லாமல் வளர்க்கப்படுமானால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
பூனை : ஒரு பூனை உங்களை கடித்தாலோ அல்லது அதன் நகக் கீறல் பட்டாலோ ‘பார்டோனெல்லா ஹென்சீலே’ (Bartonella henselae) எனப்படும் ஒரு வகை பாக்டீரியா நம் உடலுக்குள் நுழையும். இது Cat Scratch Disease எனப்படும் ஒரு தொற்றுநோயை உருவாக்கக்கூடும். இந்த நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு ஆபத்தாக இருக்கலாம். நோய்த்தொற்றால் பசியிழப்பு, உடல் வலி, வெப்பம், விக்கல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். பூனை கடித்தால், கடித்த இடத்தை உடனடியாக சுத்தமான நீர் மற்றும் சோப்பில் நன்கு கழுவ வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்துவது அவசியம். பின்னர், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
எலி : வீடுகளிலும், கழிவுகள் அதிகமுள்ள இடங்களிலும் எலிகள் சுற்றித்திரிவதை பார்த்திருப்போம். எலிகளுக்கு கூர்மையான முன் பற்கள் இருப்பதால், கடித்தால் தோலை துளைக்கும் அளவுக்கு ஆழமாகப் பாய்ந்து விடக்கூடும். எலிகள் கடிக்கும்போது ஏற்படக்கூடிய பொதுவான ஆபத்துகள் என்பது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள். சில சந்தர்ப்பங்களில், கடிதலுக்குப் பின்னர் ஒருசிலருக்கு ஒவ்வாமை போன்றும் ஏற்படும். எலி கடித்தால் ரேபிஸ் ஏற்படும் வாய்ப்பு இல்லை. ஆனால், காய்ச்சல், தலைவலி, வாந்தி, தசை வலி, மூட்டுகளில் வீக்கம், வலி இருக்கும்.
பல்லி : வீடுகளின் சுவர்களில் நிறைய நேரம் காணப்படும் பல்லிகள் பொதுவாக மனிதர்களை தாக்குவதில்லை. அவை பெரும்பாலும் சுற்றுச்சூழலை அழிக்காமல், சுத்தமாக இருக்கும் இடங்களுக்கே செல்லும். ஆனால், சில விஷம் கொண்ட பல்லிகள் உங்களை கடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படும். காய்ச்சல், சீழ், சிவப்பு கோடுகள் போன்ற அறிகுறிகள் தோன்றினால், இது தொற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, பல்லி கடித்தவுடன் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும்.
கிளி : கிளிகள் கடிப்பது சாதாரணம் போல தோன்றினாலும், அதற்கும் ஆபத்துகள் இருக்கின்றன. கிளி கடித்தால் சில நேரங்களில் சிறிய காயங்கள் மட்டும் அல்லாமல், கொடுமையான காயங்களும் உருவாகக்கூடும். கிளி கடித்தால், பாக்டீரியா நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இதில் முக்கியமாக சிட்டகோசிஸ் (Chlamydiosis) மற்றும் பாஸ்டுரெல்லோசிஸ் (Pasteurellosis) போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும். சிட்டகோசிஸ் என்பது பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு பாக்டீரியா தொற்று. இது பாதிக்கப்பட்ட கிளி மனிதரை கடித்தால், அந்த நபருக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
குரங்கு : குரங்குகளின் கடிப்பதை சாதாரணமாக கருதக் கூடாது. குரங்கு கடித்தால், ரேபிஸ் (Rabies) மற்றும் பல வகை பாக்டீரியா தொற்றுகள் பரவக்கூடும். இது உடனடி சிகிச்சை இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்தானதாக மாறும். குரங்கு கடித்தல் குறித்து அலட்சியமாகச் செயல்படுவது ஆபத்தானது. எந்த விதமான பாதிப்பும் தவிர்க்க, உடனடி மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.
செல்லப்பிராணிகளை நேசிப்பது தவறல்ல.. ஆனால் அவற்றின் செயல்பாடுகள் நம் உடல்நலத்துக்கு ஆபத்தானதா என்பதையும் கவனிப்பது அவசியம். பூனை கடியோ, எலி, கிளி கடியோ என்றால், உடனடி நடவடிக்கை எடுத்தால், பெரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.