கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியில் கதிரம்மா – வெங்கடரமணா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே மனக்கசப்பு நிலவியதாக கூறப்படுகிறது. ஒரே வீட்டில் இருந்தாலும், ஒருவருடன் ஒருவர் பேசாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், பக்கத்து வீட்டு வேணு என்ற நபருடன் கதிரம்மாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. பின்னர், நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது குறித்து சந்தேகம் கொண்ட வெங்கடரமணா, மனைவியின் செயல்களை கவனித்ததோடு, கடுமையாக கண்டித்துள்ளார்.
ஒருநாள் இரவு வீட்டுக்குத் திரும்பிய ரமணா, மனைவி செல்போனில் வேணுவுடன் உரையாடுவதைக் கண்டதும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் அவரது மனைவியை தாக்கியுள்ளார். இதனால், தனது காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி, இரவு வழக்கம் போல் வேலை முடித்து வீடு திரும்பிய ரமணா தூங்கிக்கொண்டிருந்த நிலையில், கதிரம்மா மற்றும் வேணு இணைந்து, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின்னர், சடலத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என முடிவு செய்த இருவரும், உடலை காரில் ஏற்றி, அதை எரிப்பதற்கு இடம் கிடைக்காமல் இரண்டு நாட்கள் காரில் சடலத்துடன் பயணம் செய்துள்ளனர்.
இறுதியில், காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி விட்டு, தங்கள் வீட்டுக்கு மீண்டும் திரும்பி, வழக்கம்போல நடந்து கொண்டனர். ஆனால், காட்டுப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறை அதிகாரிகள், நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் அருகே சென்று பார்த்தனர். அப்போது, ரமணாவின் சடலத்தை கண்டுபிடித்தனர். கார் பதிவு எண்ணின் அடிப்படையில் விசாரணை நடத்தி, வேணுவை கைது செய்தனர். பின்னர், மனைவி கதிரம்மாவையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.