இந்தியாவில் தங்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஹால்மார்க் முறையை (Hallmarking) இனி வெள்ளிக்கும் கட்டாயமாக கொண்டு வர அரசு பரிசீலித்து வருகிறது. வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்த முடிவு நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த தகவலை இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
ஏன் இந்த மாற்றம்?
வெள்ளி நகைகள் மற்றும் சிலை போன்ற பொருட்களில் கள்ளப்பொருட்கள் மற்றும் கலப்படம் அதிகரித்து வருவதால், நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, தங்கம் போலவே வெள்ளிக்கும் ஹால்மார்க் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நிலை என்ன?
தற்போது வெள்ளி ஹால்மார்க் செய்வது கட்டாயம் அல்ல.. விருப்ப அடிப்படையில் (Voluntary) நடைபெறுகிறது. ஹால்மார்க் செய்யப்பட்ட வெள்ளிப் பொருட்களில்
ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (HUID (Hallmark Unique Identification) இருக்கும். இந்த எண்ணை பயன்படுத்தி, BIS இணையதளத்தில் நகையின் தூய்மை, தயாரிப்பு விவரம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்க்க முடியும்.
பொதுமக்கள் என்ன செய்யலாம்?
எந்த BIS அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க்கிங் மையத்திற்கும் சென்று, தங்களுடைய வெள்ளி நகைகள் அல்லது மாதிரிகளை கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். பொதுமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சோதனை செய்யப்படுகிறது. இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப் பொருட்கள் ஹால்மார்க் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளி விலை ஏன் உயர்கிறது?
உலகளவில் தேவை – வழங்கல் இடைவெளி, தொழில்துறை பயன்பாடு அதிகரிப்பு, AI மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சி ஆகிய காரணங்களால் கடந்த ஒரே ஆண்டில் வெள்ளி விலை 170%-க்கும் மேல் உயர்ந்துள்ளது.
இந்தியாவின் நிலை
இந்தியா உலகின் பெரிய வெள்ளி நுகர்வோர் நாடுகளில் ஒன்று. ஆண்டுதோறும் சுமார் 5,000 முதல் 7,000 டன் வரை வெள்ளி தேவைப்படுகிறது. ஆனால், உள்நாட்டு உற்பத்தி இந்த தேவையின் ஒரு சிறு பகுதியையே பூர்த்தி செய்கிறது. நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஹால்மார்க் கட்டாயம் எப்போது?
வெள்ளி ஹால்மார்க் கட்டாயம் எப்போது அமலுக்கு வரும் என்ற திட்டவட்டமான காலக்கெடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த விஷயம் குறித்து தொழில் துறை பங்குதாரர்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று BIS தெரிவித்துள்ளது.



