இந்தியாவில் காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை நாளை (அக்டோபர் 4, 2025) முதல் புதிய முறையில் அமலுக்கு வரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
1980 களில் வங்கியில் காசோலை செலுத்தினால், அந்த தொகை பயனாளியின் கணக்கில் சேர ஒரு வாரம் காத்திருக்க வேண்டியிருந்தது. தொழில்நுட்ப முன்னேற்றங்களால் காசோலை பரிசீலனைக் காலம் 3 நாட்களாக குறைந்தது. அதன்பிறகு காசோலை துண்டிப்பு முறை (Cheque Truncation System, CTS) அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு நாளில் பணம் பயனாளியின் கணக்கில் சேர முடிந்தது. இதனால், வங்கி சேவை முறை மற்றும் பண பரிமாற்ற வேகம் முற்றிலும் மாற்றம் அடைந்தது.
இந்நிலையில் ஒரு மணி நேரத்தில் காசோலையை பணமாக்கும் முறையை RBI கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, ஒரு மணி நேரத்துக்குள் பணம் பயனாளியின் கணக்கில் செல்லும். வங்கிகள் டெபாசிட் செய்த காசோலைகளை நேரடியாக ஸ்கேன் செய்து பரிசீலித்து, உடனடியாக பயனாளி கணக்கில் பணத்தை செலுத்தப்படும். இதன் மூலம், பண பரிவர்த்தனை முந்தைய முறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் விரைவாகவும், பயனாளிக்கு வசதியான முறையிலும் நடைபெறும்.
புதிய நடைமுறை:
* காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் உடனடியாக ஸ்கேன் செய்யப்படும்.
* பரிசீலிக்கப்பட்ட காசோலை மூலம் பணம் ஒரு மணி நேரத்திற்குள் பயனாளியின் வங்கி கணக்கில் சேரும்.
* காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும்.
* டெபாசிட் செய்த காசோலைகளை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரிசீலிக்க வேண்டும். வங்கிகள் அதை செய்யும் தவறும் பட்சத்தில் காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.



