தமிழ்நாடு முழுவதும் உள்ள 590 சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்துப் பதிவு, திருமணப் பதிவு, உயில் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைப் பதிவு செய்யக் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், இந்தக் கூட்ட நெரிசலை குறைக்கவும், நடைமுறைகளை எளிதாக்கவும் பத்திரப்பதிவுத் துறை புதிய டிஜிட்டல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘ஸ்டார் 3.0’ (STAR 3.0) என்ற பெயரில் புதிய மேம்படுத்தப்பட்டத் திட்டம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
வீட்டில் இருந்தபடியே 10 நிமிடத்தில் பதிவு :
‘ஸ்டார் 3.0’ திட்டத்தின் மிக முக்கிய நோக்கம், மக்கள் பத்திரப்பதிவுச் சேவைகளை விரைவாகவும், வீட்டில் இருந்தபடியேவும் பெற வழிவகுப்பதுதான்.
பத்திரப்பதிவு முறை: புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் அல்லது மனைகளை வாங்குதல், விற்றல் போன்றவற்றை இனி ஆன்லைனிலேயே பதிவு செய்யலாம். சொத்துக்களை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் விவரங்களை மென்பொருளில் உள்ளீடு செய்தால், அது தானாகவே பத்திரங்களை உருவாக்கிவிடும்.
சரிபார்ப்பு: ஆதார் எண்ணைப் பதிவு செய்தவுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளீடு செய்து, விரல் ரேகை பதிவையும் மேற்கொண்டால் போதும். இதன் மூலம் பத்திரப்பதிவை வீட்டில் இருந்தபடியே சுமார் 10 நிமிடங்களில் செய்து முடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த வசதி மூலம், பத்திரப்பதிவு அலுவலகங்களுக்குக் கால்கடுக்க நடந்து, டோக்கனுக்காகக் காத்திருக்க வேண்டிய சிரமம் முழுமையாக நீங்கும். பதிவு செய்யப்பட்ட பத்திரமும் மக்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
உடனடியாக கிடைக்கும் பத்திர நகல் :
தற்போது ஆன்லைன் மூலம் ஆவண நகல் பெற விண்ணப்பித்தால், அது சார் பதிவாளர் ஒப்புதலுக்குச் சென்று, இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, ‘ஸ்டார் 3.0’ திட்டத்தில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இனி, ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட அடுத்த நிமிடத்திலேயே, அதற்கான சான்றிட்ட நகல் (Certified Copy) ஆன்லைன் மூலம் எளிதாகக் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட உள்ளது.
இதுமட்டுமின்றி, குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களைப் பதிவு செய்வதற்குப் புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி, நேரடியாக அலுவலகங்களுக்குச் செல்லாமல், இருக்கும் இடத்திலேயே அதற்கான பதிவுகளை மேற்கொண்டு ஒப்புதல் பெற முடியும். இதேபோல, வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை வாங்குபவர்களும், பதிவு செய்வதற்காக இனிப் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
இப்படிப் பதிவுத்துறை சார்ந்த பல்வேறு சிக்கல்களைக் களைந்துள்ள ‘ஸ்டார் 3.0’ என்ற இந்தத் திட்டத்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



