இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையில் அடுத்த கட்டப் பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில், மும்பையில் நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2025 நிகழ்ச்சியில், இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) இணைந்து தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) யுபிஐ சேவையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இனி யுபிஐ மூலம் பணம் செலுத்த, ரகசிய PIN எண்ணை உள்ளிடுவது அல்லது தொலைபேசியை எடுத்துச் செல்வது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, பயனர்கள் முகம் அல்லது கைரேகை அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மிக விரைவாக பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இந்தப் புதிய வசதி ஆதார் பயோமெட்ரிக் அமைப்புடன் இணைக்கப்பட்டு, பாதுகாப்பையும் வேகத்தையும் உறுதி செய்கிறது.
பரிவர்த்தனைக்கான தரவுகள் அனைத்தும் பயனரின் சாதனத்திலேயே இருப்பதால், இது ஹேண்ட்ஸ்-ஃப்ரீ அனுபவத்தை வழங்குவதுடன், தரவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என NPCI தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட மற்றொரு புதுமையாக, சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்காக வடிவமைக்கப்பட்ட யுபிஐ லைட் (UPI Lite) அம்சம், இப்போது ஸ்மார்ட் கண்ணாடிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்ணாடியை அணிந்திருக்கும் பயனர்கள், குரல் மூலம் கட்டளையிட்டு, QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், சிறிய தொகைப் பரிவர்த்தனைகளை PIN இல்லாமல், மிக எளிமையாக முடிக்க முடியும். டீக்கடை, பேருந்து கட்டணம் போன்ற அன்றாட செலவுகளுக்கு இனி மொபைலை எடுக்கத் தேவையில்லை. அத்துடன், கூட்டுக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் பலர் ஒப்புதல் அளித்துப் பணம் செலுத்த உதவும் மல்டி-சிக்னேட்டரி யுபிஐ அம்சத்தையும் NPCI அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பயோமெட்ரிக் மற்றும் அணியக்கூடிய சாதன ஆதரவு, இந்திய டிஜிட்டல் கட்டண அனுபவத்தை மிகவும் இயல்பாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Read More : அடுத்த அதிரடி..!! சபாநாயகர் அப்பாவு மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு..!! சட்டமன்ற தேர்தலில் போட்டி..?