ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), பிஎஃப் பணம் எடுப்பதற்கான விதிகளில் மிகப்பெரிய தளர்வுகளை அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முடிவெடுக்கும் CBT கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை முழுவதும் (100% வரை) எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில், பிஎஃப் ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் ரூ.1,000 ஆக இருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டாலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும், ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பாகப் பிஎஃப் தொகையைப் பகுதிவாரியாக எடுப்பதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அமைச்சர் மன்சுக் மாண்டவியா இது குறித்துப் பேசுகையில், “பகுதிவாரியாகப் பணம் எடுப்பதற்கான தேவைக் காரணங்கள் 13இல் இருந்து 3 வகைகளாக (அத்தியாவசியம், வீட்டுத் தேவை மற்றும் சிறப்பு சூழ்நிலை) குறைக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின் கீழ், ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு உட்பட, பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகையில் 100% வரை எடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகப் பணம் திரும்பப் பெறுவதற்கான வரம்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இனி, கல்வித் தேவைக்காக 10 முறையும் (முன்பு 3 முறை), திருமணத் தேவைக்காக 5 முறையும் (முன்பு 3 முறை) பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுகிறது. வேலையின்மை, தொற்றுநோய் அல்லது நிறுவன மூடல் போன்ற சிறப்பு சூழ்நிலைகளில், ஊழியர்கள் காரணம் எதுவும் தெரிவிக்காமல் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.
எனினும், ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிஎஃப் கணக்கில் 25% தொகையைக் குறைந்தபட்ச இருப்பாகப் பராமரிக்க வேண்டும் என்ற விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்தப் புதிய தளர்வுகள் மாதச் சம்பளம் பெறுவோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Read More : மனிதர்களுக்கு மரண வாய்ப்பை தரும் 10 விலங்குகள்..!! ஒரே கடிதான்.. உயிரே போயிரும்..!! எச்சரிக்கையா இருங்க..!!



