இந்திய ரிசர்வ் வங்கியானது தங்க நகைக் கடன் விதிமுறைகளில் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய வழிகாட்டுதல்கள், தங்கக் கடன் சந்தையில் சில சவால்களையும் உருவாக்கியுள்ளன.
கடன் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகள் :
வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) இனிமேல் தங்கம் வாங்குவதற்காக கடன் வழங்க முடியாது. அதாவது, நகை, நாணயம், தங்கப் பத்திரங்கள் அல்லது பரஸ்பர நிதிகள் போன்ற எந்த வடிவத்திலும் தங்கம் வாங்குவதற்கு கடன் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்தாண்டு ஏப்.1ஆம் தேதி முதல் தங்கத்தின் மதிப்பில் எவ்வளவு சதவீதத்தை கடனாகப் பெற முடியும் என்ற வரம்பு 3 அடுக்குகளாகப் பிரிக்கப்படவுள்ளது. இதன் பொருள், கடன் தொகையைப் பொறுத்து, நீங்கள் பெறக்கூடிய கடனின் அளவு மாறுபடும். அதாவது, ரூ.2.5 லட்சம் வரை 85%, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 80%, ரூ.5 லட்சத்திற்கு மேல் 75% என்ற அளவுக்கு இருக்கும்.
‘புல்லட் திருப்பிச் செலுத்தும்’ முறையில் மாற்றம் :
‘புல்லட் திருப்பிச் செலுத்தும்’ (Bullet Repayment) திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள் இனி அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் 12 மாதங்களுக்குள் முழுமையாகச் செலுத்த வேண்டும். முன்பு வட்டி மட்டும் செலுத்தி கடனைப் புதுப்பிக்கும் நடைமுறைக்கு இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடன் காலம் தாண்டுவதை தடுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
தங்கத்தை திரும்பப் பெறுவதில் பாதுகாப்பு :
கடன் முழுமையாக அடைக்கப்பட்டவுடன், அடகு வைத்த தங்கத்தை கடன் கொடுத்த நிறுவனம் அதே நாளிலோ அல்லது அதிகபட்சமாக 7 வேலை நாட்களுக்குள்ளோ திருப்பித் தர வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். இது கடன் வாங்குபவர்களின் நலனைப் பாதுகாக்கும் மிக முக்கியமான விதிமுறையாகும்.
யாருக்குச் சாதகம்..?
தங்கத்தை மூலப்பொருளாகப் பயன்படுத்தும் உற்பத்தியாளர்களுக்கு மூலதனக் கடன் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சிறிய நகரங்களில் உள்ள சிறிய நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும் தங்கக் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. தங்க உலோகக் கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் காலமும் 270 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் ஒட்டுமொத்தமாக தங்கக் கடன் சந்தையில் அதிக ஒழுக்கத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும் அதே வேளையில், தங்கம் வாங்குவதற்காக கடன் பெறும் நபர்களுக்கும், புல்லட் திருப்பிச் செலுத்தும் முறையில் கடனைப் புதுப்பிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கும் இது சற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.