ரஷ்ய ராணுவத்தில் 44 பேர் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை விரைந்து விடுவிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதல் முதல், ரஷ்யாவில் வேலை என மோசடி செய்து பல இந்தியர்கள் இடைத்தரகர்கள் மூலம் அங்கு செல்கின்றனர். அங்கு அவர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து தகவல் அறிந்ததும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது.
அதனடிப்படையில், சமீபத்திய மாதங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை ரஷ்யாவிடம் எடுத்துச் சென்று, ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக, ரஷ்ய ராணுவத்தில் பல இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். தகவலின்படி, தற்போது ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்,” என்றும் ரஷ்ய ராணுவத்தில் 27 இந்தியர்கள் பணியாற்றுவதாக இந்திய அதிகாரிகள் செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தனர். இந்த விஷயத்தை இந்தியா ரஷ்ய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று, இந்தியர்களை “சீக்கிரமாகவே விடுவிக்கவும், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்” வலியுறுத்தியுள்ளதாக ஜெய்ஸ்வால் கூறினார்.
நாங்கள் ரஷ்ய தரப்புடன் தொடர்பில் இருக்கிறோம். சம்பந்தப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு தகவல்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவர்களை மீட்பதற்காக ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.



