ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு புண்ணிய பூமியாக திகழ்கிறது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகழ்பெற்ற முருக வழிபாட்டுத் தலமான இங்கு, கருவறையில் முருகப்பெருமான் சுமார் 7 அடி உயரத்தில், வள்ளி மற்றும் தேவசேனாவுடன் கம்பீரமாகக் கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார்.
இந்தத் தலத்திற்கு ‘வல்லக்கோட்டை’ என்ற பெயர் வந்ததன் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராண வரலாறு உள்ளது. முன்பு இப்பகுதியை ஆண்டு வந்த ‘வல்லன்’ என்ற அசுரனை முருகப்பெருமான் வதம் செய்தபோது, அவன் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினான். அவனது வேண்டுகோளுக்கு இணங்கி, அந்த இடத்திற்கு “வல்லன் கோட்டை” என்று முருகன் பெயரிட்டார். காலப்போக்கில் அதுவே மருவி ‘வல்லக்கோட்டை’ என மாறியது.
இக்கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. அர்த்த மண்டப தூண்களில் காமாட்சி தவம் செய்யும் சிற்பம் மற்றும் ராமர் அனுமனைத் தழுவும் அரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், முருகப்பெருமானுக்கு எதிரே ‘இரட்டை மயில்’ வாகனங்கள் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இத்தலத்தின் மற்றுமொரு அதிசயம் ‘வஜ்ர தீர்த்தம்’ அல்லது ‘இந்திர தீர்த்தம்’ ஆகும்.
தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தால் நிலத்தில் ஊன்றி இந்தத் தீர்த்தத்தை உருவாக்கியதாகவும், இதன் நீரால் முருகனுக்கு அபிஷேகம் செய்து அவர் பல வரங்களைப் பெற்றதாகவும் ஐதீகம். இதனால், இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபடுவோருக்குத் தீராத வினைகள் தீரும் என்பது நம்பிக்கை. அருணகிரிநாதரின் கனவில் தோன்றிய முருகன், “வல்ல கோட்டையினை மறந்தனையே…” என்று நினைவூட்டியதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே அருணகிரிநாதர் இத்தலத்திற்கு வந்து 8 திருப்புகழ் பாடல்களைப் பாடி முருகனை துதித்துள்ளார்.
இழந்த செல்வத்தையும், பதவியையும் மீட்க விரும்புவோருக்கு வல்லக்கோட்டை முருகன் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறார். அகந்தையால் அனைத்தையும் இழந்த பகீரத மன்னன், துர்வாச முனிவரின் அறிவுரைப்படி, இத்தலத்தில் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து இழந்த ராஜ்ஜியத்தை மீட்டதாக வரலாறு கூறுகிறது. அதேபோல், வியாழக்கிழமை இரவில் இங்குத் தங்கி, வஜ்ர தீர்த்தத்தில் நீராடி, வெள்ளிக்கிழமை தரிசனம் செய்வோருக்கு மன அமைதியும், இழந்த வாய்ப்புகளும் மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமண வரம் வேண்டுவோர் மற்றும் குழந்தை வரம் நாடுவோர் கந்த சஷ்டி, கிருத்திகை தினங்களில் இக்கோவிலில் குவிகின்றனர்.
Read More : தமிழக பத்திரப் பதிவுத்துறையில் அதிரடி மாற்றம்..!! நடைமுறைக்கு வந்த கடுமையான விதிமுறைகள்..!! என்ன தெரியுமா..?



