மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 60 வயது மதிக்கத்தக்க பயலால் ரஜக் என்பவரின் உடல், சாக்குப்பையில் சுற்றப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கயிறுகள் மற்றும் சேலைகளால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்தச் சடலம், நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில், கள்ளக்காதல் மற்றும் சொத்து மோதல் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இறந்த பயலால் ரஜக்கிற்கு 3 திருமணங்கள் நடந்துள்ளன. அவரது முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், இரண்டாவது மனைவி குட்டி பாயுடனான திருமணமும், குழந்தை இல்லாததால் அவரது தங்கையான முன்னி என்கிற விமலாவை அவர் 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.
பயலாலை மணந்த பிறகு, முன்னி மூதாதையர் நில ஒப்பந்தங்கள் தொடர்பாக அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்ற சொத்து வியாபாரி லல்லு குஷ்வாஹாவுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டுள்ளார். இந்த கள்ளக்காதலை கண்டித்தும் கைவிடாததால், முன்னி தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி, ஆகஸ்ட் 30ஆம் தேதி பயலால் தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, லல்லுவும் அவரது கூட்டாளியான தீரஜும் சேர்ந்து, இரும்புக் கம்பியால் அவரது தலையில் தாக்கியுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், உடலை ஒரு சாக்குப்பை மற்றும் போர்வையில் சுற்றிக் கட்டி வீட்டின் பின்புறம் உள்ள வயலில் இருந்த கிணற்றில் வீசியுள்ளனர்.
மறுநாள் பயலாலின் முன்னாள் மனைவிதான், கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது ஏதோ மிதப்பதைக் கண்டு, அது தனது முன்னாள் கணவரின் சடலம் என்பதை அறிந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து வந்து, கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, சடலத்துடன் பயலாலின் செல்போனையும் மீட்டனர். இதுவே கொலையாளிகளை அடையாளம் காண உதவியது.
இந்தக் கொலை தொடர்பாக, முன்னி, அவரது கள்ளக்காதலன் லல்லு மற்றும் அவரது கூட்டாளி தீரஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், கிராம மக்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.