நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை கண்காணிக்கவும் பயன்படும் உலகளாவிய இருப்பிட அமைப்பு (GPS – Global Positioning System) மூலம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் மட்டுமின்றி, அந்த சாதனத்தை வைத்திருக்கும் நபர் என்ன செய்துகொண்டிருக்கிறார், அவர் அறையில் இருக்கிறாரா அல்லது வெளியே இருக்கிறாரா என்பது போன்ற பல முக்கியமான கூடுதல் தகவல்களை சேகரிக்க முடியும் என்று டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
டெல்லி ஐஐடி மேற்கொண்ட இந்த ஆய்வுக்கு ‘ஆண்ட்ரோகான்’ (AndroCon) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள சென்சார்கள், லொகேஷன் தகவலை விட சிறப்பாக செயல்படுவது குறித்து இதில் ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, செயலிகளுக்கு ஏற்கனவே இருப்பிடத்திற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அந்த அனுமதி ஒரு ரகசிய சென்சார் போல செயல்பட தொடங்குவதாக கூறப்படுகிறது.
மோஷன் சென்சார் இல்லாமலேயே துல்லியமான கணிப்பு :
இந்த ஆண்ட்ரோகான் ஆய்வு, ஸ்மார்ட்போனின் கேமரா, மைக்ரோபோன் அல்லது மோஷன் சென்சார் போன்ற எந்த வசதியையும் பயன்படுத்தவில்லை. மாறாக, இது ஜிபிஎஸ்-ன் அடிப்படையான காரணிகளான டோப்லர் ஷிஃப்ட் மற்றும் சிக்னல் பவர் போன்ற அம்சங்களை மட்டுமே மையமாக கொண்டு நடத்தப்பட்டது. இந்த அம்சங்கள் மூலம், ஒரு நபர் அமர்ந்திருக்கிறாரா, நின்றுகொண்டிருக்கிறாரா அல்லது ஒரு அறைக்குள் இருக்கிறாரா என்பது போன்ற துல்லியமான தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம், இருப்பிடத்தை தவிர, அந்த அறை கூட்டமாக உள்ளதா அல்லது கூட்டம் குறைவாக உள்ளதா என்பதை கூட கண்டறிய உதவுவதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 40,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் பல ஸ்மார்ட்போன்கள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆண்ட்ரோகான் ஆய்வு, இடத்தை 99 சதவீதம் துல்லியமாகவும், மனிதர்களின் செயல்களை 87 சதவீதம் துல்லியமாகவும் கணித்துள்ளது.
இந்த ஆய்வின் மூலம், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெறும் லொகேஷனை தாண்டி, மனிதச் செயல்பாடுகள் குறித்துக் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்பதை டெல்லி ஐஐடி உறுதி செய்துள்ளது. இது தனிநபர் தரவுகளின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
Read More : உங்கள் வீட்டில் ஏசி இருக்கா..? குளிர்காலத்தில் ஹீட்டராக கூட மாற்றலாம்..!! இந்த டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க..!!



