காலை நேரத்தை ஆரோக்கியமான முறையில் துவங்கினால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். பெரும்பாலானோர் தங்கள் நாளை தேநீர் அல்லது காஃபியுடன் ஆரம்பிப்பது வழக்கமாக இருக்கும். ஆனால், சிறிய ஒரு மாற்றம் கூட உங்கள் உடல்நலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு இளநீர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இது இயற்கையானது, சத்து நிறைந்தது, மேலும் பல நன்மைகளும் கொண்டது.
செரிமானம் :
இளநீரில் உள்ள இயற்கையான நொதிகள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள், பச்சில்கள், நெஞ்செரிச்சல் மற்றும் அமில சுரப்பு போன்ற செரிமானக் கோளாறுகளில் இருந்து நிவாரணம் தருகிறது. வாயுப் பிரச்சனை அல்லது மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு, காலையில் ஒரு டம்ளர் இளநீர் நிச்சயம் நன்மை பயக்கும்.
உடல் நீரேற்றம் :
மாதம் எதுவாக இருந்தாலும், உடலை நன்கு நீரூற்றம் செய்திருக்க வேண்டும். இதற்கு இளநீர் ஒரு சிறந்த தேர்வு. இதில் அதிக அளவு தண்ணீர் மற்றும் சத்து நிறைந்த உப்பு உள்ளது. இது உடற்பயிற்சிக்குப் பிறகு குடிப்பது, உடலை புத்துணர்ச்சி பெறச் செய்கிறது.
எடை இழப்பு :
இளநீரில் கலோரி அளவு மிகக் குறைவாக உள்ளது. இதில் கொழுப்பு இல்லாததாலும், இது பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாலும், உணவை கட்டுப்படுத்த ஏதுவாக இருக்கிறது. எடை குறைக்க விரும்புவோர் உணவுப் பட்டியலில் இதை சேர்த்துக்கொள்வது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி :
இளநீரில் உள்ள இயற்கை வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. தினமும் குடித்து வந்தால், உடல் மெதுவாக நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அமைப்பை வளர்த்துக் கொள்கிறது.
ரத்த அழுத்த கட்டுப்பாடு :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் இளநீர் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள பொட்டாசியம், சோடியம் அளவை சமப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சமமாக வைத்திருக்க உதவும்.
சிறுநீரகம் :
இளநீர் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்திருக்க உதவும். இது இயற்கையான டையூரிடிக் ஆக செயல்பட்டு, உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுகளை வெளியேற்றுவதில் உதவுகிறது. சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.
சருமம் :
சருமம் வறண்டு அல்லது பருக்கள் போன்ற பிரச்சனை இருந்தால், இளநீர் ஒரு இயற்கையான தீர்வாக இருக்கும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (antioxidants), சருமத்தை ஃப்ரீ ராடிக்கல்களில் இருந்து பாதுகாக்கின்றன. சருமம் பளபளப்பாகவும், நன்கு இளமையுடன் இருக்கவும் உதவுகிறது.
உடல் ஆற்றல் :
காலை நேரத்தில் ஒரு டம்ளர் இளநீர் குடித்தால், உடனடி சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். இதில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் தாதுக்கள், உடலுக்கு தேவையான சக்தியை விரைவாக வழங்குகின்றன.