இன்றைய வேகமான உலகில், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் சாமானிய மக்களின் அன்றாட தேவையாக வாடகை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மாறிவிட்டன. ஆனால், தனியார் நிறுவனங்கள் நடத்தும் செயலிகளில் நிலவும் ‘நிலையற்ற கட்டண முறை’ பயணிகளுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களான ‘பீக் ஹவர்ஸில்’ (Peak Hours), சாதாரணக் கட்டணத்தை விடப் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொதுமக்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இந்தச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, மத்திய அரசு தற்போது “பாரத் டாக்ஸி” என்ற புதிய செயலியை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பிரபல தனியார் போக்குவரத்துச் செயலிகள், வாகன உரிமையாளர்களிடம் (ஓட்டுநர்கள்) இருந்து சுமார் 30 சதவீதம் வரை கமிஷனாக பெறுகின்றன. இதனால், உழைக்கும் ஓட்டுநர்களுக்கு கிடைக்கும் வருமானம் குறைவதோடு, அந்தச் சுமை மறைமுகமாகக் கூடுதல் கட்டணமாகப் பொதுமக்கள் மீது சுமத்தப்படுகிறது. இதனை மாற்றியமைக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள “பாரத் டாக்ஸி” செயலியில், ஓட்டுநர்களிடமிருந்து எந்தவித கமிஷனும் வசூலிக்கப்படாது என்பதுதான் இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். இதனால் ஓட்டுநர்களுக்கு முழு வருமானம் கிடைப்பதுடன், பயணிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை உறுதியாகிறது.
ஏற்கனவே புதுடெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இச்செயலியை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகப் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் பாரத் டாக்ஸி செயலியைச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில மாதங்களில் இப்பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என்று தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக செயற்கையாகக் கட்டணத்தை உயர்த்துவதைத் தடுத்து, ஒரு சீரான விலையை நிர்ணயிப்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். பாரத் டாக்ஸி பயன்பாட்டுக்கு வரும்போது, ஆட்டோ, கார் மற்றும் பைக் டாக்சி ஓட்டுநர்கள் அதிக அளவில் இச்செயலியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடுத்தர வர்க்கத்தினரின் பயணச் செலவை வெகுவாகக் குறைக்கும் அதேவேளையில், போக்குவரத்துத் துறையில் அரசுத் தரப்பிலான ஒரு வெளிப்படையான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.



