நாட்டின் மலிவான இணைய சேவை மற்றும் கொரோனா ஊரடங்கு ஆகிய காரணங்களால், யூடியூப் செயலி இன்று மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. இணைய உலகில் யாரும் வீழ்த்த முடியாத சக்தியாக திகழும் யூடியூப், பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்குவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், தற்போது ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்ப மாற்றத்தை யூடியூப் களமிறக்க உள்ளது.
பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் பழைய மற்றும் குறைந்த தரத்தில் உள்ள வீடியோக்களை தரம் உயர்த்தும் புதிய வசதியை யூடியூப் விரைவில் கொண்டு வரவுள்ளது. இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஏற்கனவே யூடியூப் தளத்தில் உள்ள 1080p தரத்திற்கும் குறைவான பழைய வீடியோக்கள், AI மூலமாக தானாகவே தரம் உயர்த்தப்படும்.
அதுமட்டுமின்றி, இனிமேல் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களின் தரம் குறைவாக இருந்தாலும் கூட, அவை ஆட்டோமேட்டிக் முறையில் HD தரத்திற்கு மாற்றப்படும். இதன் விளைவாக, இனி யூடியூப் தளத்தில் குறைந்த தரத்திலான வீடியோக்களே இருக்காது என்று அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் பழைய மற்றும் புதிய வீடியோக்களை 4K, HD மற்றும் Ultra HD வரை தரம் உயர்த்த யூடியூப் திட்டமிட்டுள்ளது. இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பயனர்கள் தங்கள் மொபைலில் உள்ள யூடியூப் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று ‘Super Resolution’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்தால், வீடியோக்கள் அனைத்தும் உடனடியாகத் தரம் உயர்த்தப்படும்.
இந்த புதிய வசதி, குறிப்பாக பழைய திரைப்படங்கள், ஆவணப் படங்கள் அல்லது ஆரம்பக் காலத்தில் பதிவேற்றப்பட்ட தரமற்ற வீடியோக்களை விரும்பிப் பார்க்கும் பயனர்களுக்கு அதிகளவில் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த AI மேம்பாட்டால் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும், பார்ப்பவர்களும் என இரு தரப்பினருமே பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



