குலதெய்வத்தை முன்னோர்கள் வழிபட்ட முறையை பின்பற்றி வழிபடுவதே சிறப்பு. அந்த வகையில், குலதெய்வத்தை எந்த நாளில் வழிபட்டால், தெய்வத்தின் முழுமையான அருளை பெற முடியும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழர் வாழ்வியல் முறையில் குலதெய்வ வழிபாடு என்பது முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் முறையாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலைமுறைகள் தொடர, ஒரு தெய்வம் ‘குலதெய்வம்’ என இருக்கும். அந்தக் குலதெய்வத்திற்கு செய்யும் வழிபாடு, சாதாரண தெய்வ வழிபாட்டில் இருந்து வேறுபட்டதாக இருக்கும்.
ஆனால், எப்போது குலதெய்வ வழிபாடு செய்யலாம்?, அதற்கு சிறந்த நாள் எது? என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். பொதுவாக அமாவாசை, பௌர்ணமி நாட்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாட்கள் ஆகும். அமாவாசை நாள் பித்ரு தர்ப்பணங்களுக்கான விசேஷத்தைக் கொண்டதால், மூதாதையர்கள் வழியாக வந்த குலதெய்வ வழிபாட்டுக்கு சிறந்த நாளாக இது பார்க்கப்படுகிறது.
பௌர்ணமி சக்தி வழிபாடுகளுக்கு உகந்த நாள். அம்மன், மாரியம்மன், வலியம்மை போன்ற தெய்வங்களை வழிபடும் குடும்பங்கள் பௌர்ணமி அன்று குலதெய்வத்தை வழிபடுவார்கள். பல குடும்பங்களில், முன்னோர்கள் சொன்ன நாளில் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் நடைமுறையும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், குலதெய்வத்தின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை ஏற்ற நாள். ஒருவேளை உங்களின் குலதெய்வம் சிவ பெருமானாகவோ அல்லது சிவனுடன் தொடர்புடைய தெய்வங்களாகவோ இருந்தால் திங்கட் கிழமையிலும், முருகப்பெருமானுக்கு தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால் செவ்வாய் கிழமையும், பெருமாள் தொடர்புடைய தெய்வங்களை புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் வழிபடலாம். அம்பாள் அல்லது பெண் தெய்வமாக இருப்பின், வெள்ளிக்கிழமை வழிபடலாம்.
Read More : Independence Day 2025| இந்தியாவுடன் இணைந்து இன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாடுகள் எவை தெரியுமா?