காலை எழுந்ததும் காஃபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் பலரிடம் உண்டு. ஆனால், இந்த பானங்கள் சிலருக்கு வயிற்றின் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சிறந்த மாற்றாக, சங்குப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் ‘ப்ளூ டீ’ அல்லது ‘சங்குப்பூ தேநீர்’ உள்ளது. இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு தருகிறது.
சங்குப்பூ தேநீரின் பயன்கள் :
மன அழுத்தத்தைக் குறைக்கும் : இந்த தேநீரில் உள்ள இயற்கையான சேர்மங்கள் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வழிவகுக்கும்.
ஆற்றல் தரும் ஆன்டிஆக்ஸிடண்டுகள் : சங்குப்பூ தேநீரில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் மிக அதிகமாக உள்ளன. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உள் உறுப்புகளில் ஏற்படும் வீக்கங்களில் இருந்து பாதுகாக்கிறது.
உடல் எடை குறைப்பு : காலையில் வெறும் வயிற்றில் இந்தத் தேநீரை குடிப்பதால், உடலில் தேங்கியுள்ள கொழுப்பு கரையும்.
சர்க்கரை அளவு : நீரிழிவு நோயாளிகள் காலையில் இந்த தேநீரைக் குடிப்பதால், நாள் முழுவதும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும்.
மூளை ஆரோக்கியம் மற்றும் பார்வை : இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். நினைவாற்றல் மற்றும் கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கும். அத்துடன், கண்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முதுமையால் ஏற்படும் பார்வை தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும்.
தயாரிப்பது எப்படி..?
5 முதல் 6 சங்குப்பூ இதழ்களை எடுத்து, ஒரு கோப்பை தண்ணீரில் 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்னர் அதை வடிகட்டி, அத்துடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம். எலுமிச்சை சாறு சேர்க்கும்போது தேநீரின் நிறம் நீல நிறத்தில் இருந்து ஊதா நிறமாக மாறுவதைக் காணலாம். இது தேநீரின் சுவையை அதிகரிப்பதுடன், கூடுதல் நன்மைகளையும் தருகிறது.