சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர், புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன், கோவையின் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக தினேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண ஆன்லைன் நட்பாகத் தொடங்கியதாக தெரிகிறது.
ஆனால் 2022ஆம் ஆண்டு, தினேஷ் நேரில் அந்தப் பெண்ணைச் சந்தித்து, தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இளம்பெண் தன்னிடம் காதல் எண்ணமே இல்லை எனத் தெளிவாக கூறியும், தினேஷ் தொடர்ந்து வற்புறுத்தியதால், தினேஷின் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், கோவைக்கு மீண்டும் வந்து, இளம் பெண் பணியாற்றிய கார் ஷோரூமில் புகுந்து, அரிவாளால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதல் வழக்கில் போலீசார் தினேஷை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த தினேஷ், மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சம்பந்தப்பட்ட பெண்ணைத் தேடி குனியமுத்தூர் பகுதிக்கு வந்துள்ளார். அந்த நேரத்தில், பெண் வீட்டிலிருந்து மளிகைக்கடைக்கு சென்றிருந்தபோது, திடீரென தினேஷ் அங்கு வந்து, மீண்டும் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தினேஷை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே பெண்ணை இருமுறை குறிவைத்து, காதலை ஏற்க மறுத்ததற்காக கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.