மத்தியப்பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. எக்ஸலன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவராக இருந்த சூர்யன்ஷ் கோச்சார் (வயது 18) தனது முன்னாள் ஆசிரியை (வயது 26) மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் திங்கள் பிற்பகல் 3:30 மணி அளவில், ஆசிரியை வீட்டில் தனியாக இருந்தபோது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென அவரது வீட்டிற்கு வந்த சூர்யன்ஷ், பெட்ரோல் நிரப்பிய பாட்டலை கொண்டு வந்து, ஆசிரியை மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடி உள்ளான்.
இதை சற்றும் எதிர்பாராத ஆசிரியை, தன்னால் முடிந்தவரை உதவிக்காக அலறியுள்ளார். இதையடுத்து, பக்கத்து வீட்டினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 25% தீக்காயங்களுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிரியையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவன் தனது முன்னாள் ஆசிரியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். ஆனால், ஆசிரியைக்கு இது பிடிக்கவில்லை. பலமுறை அந்த மாணவனை எச்சரித்துள்ளார், புகாரும் அளித்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.