ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவது தொடர்பான வழக்கில், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இன்று தெலங்கானா அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முன் ஆஜரானார்கள்.. இந்த வழக்கில் அவரது பங்கு குறித்து SIT ஆழமான விசாரணை நடத்தி பல கேள்விகளைக் கேட்டது. விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு வழிகளில், குறிப்பாக இந்த செயலிகளின் விளம்பரம் அல்லது ஊக்குவிப்பு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. விசாரணை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.. இதை தொடர்ந்து பிரகாஷ் ராஜ் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்..
செயலி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விவரங்களை அவர் CID-யிடம் வழங்கியதாகவும், CID விசாரணையின் போது இதுபோன்ற விளம்பரங்களை மீண்டும் செய்ய மாட்டேன் என்றும் தெளிவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம், நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி போன்ற பல திரைப்பட பிரபலங்களும் இதுபோன்ற செயலிகளை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.
தெலங்கானா மாநில சூதாட்டச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) மற்றும் பிற சட்டங்களின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளைத் தடுக்க தெலங்கானா அரசு கூடுதல் காவல்துறை இயக்குநர் (CID) மேற்பார்வையின் கீழ் ஒரு SIT ஐ அமைத்துள்ளது. மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்குகள் குறித்து இந்தக் குழு விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளது.
இந்த செயலிகளின் விளம்பர உத்திகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் இந்த தளங்களை இயக்கும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுடனான அவர்களின் தொடர்புகள் குறித்து புலனாய்வுக் குழு ஆராய்ந்து வருகிறது. இந்த செயலிகளை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் இதில் எந்த அளவிற்கு பங்கு வகிக்கிறார்கள் என்பதை அறிய விசாரிக்கப்படுகிறார்கள். இந்திய சட்டங்களின் கீழ், சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.



