சொத்துகளைப் பற்றிய வாரிசு சிக்கல்கள் பிற்காலத்தில் உருவாகாமல் தடுக்க உயில் (Will) எழுதுவது மிக முக்கியமாகி வருகிறது. சட்டப்படி 21 வயது நிரம்பிய யாரும் உயில் எழுதத் தகுதி பெற்றவர்கள். குறிப்பாக ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்துகள் மீது மட்டுமே உயில் எழுத முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயில் தயாரிக்கும் போது, அல்லது எழுதித் தீர்ந்த பிறகு, நம்பிக்கைக்குரிய இரண்டு பேரிடம் அதன் இருப்பைத் தெரிவித்து வைப்பது அவசியம். இதனால் அந்த ஆவணம் உரிய நேரத்தில், உரியவர்களின் கைக்கு சேரும். பாரம்பரிய முறைகள் மூலம் மட்டுமே உயில் எழுதிவரும் நிலையில், உயில் எழுதும் செயல்முறை இப்போது மேலும் எளிமையாகியுள்ளது. பாரம்பரிய முறையில் செலவாகும் நேரம், பணம், சட்ட ஆலோசனை போன்ற சிக்கல்களை குறைக்க, ஆன்லைன் உயில் தயாரிப்பு சேவைகள் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றன.
ஆன்லைனில் உயில் எழுதுவதன் முக்கிய நன்மைகள்:
* ஆன்லைனில் உயில் எழுத அதிக பணம் செலவாகாது.
* சட்ட நிபுணர்களை அணுக தேவையில்லை; சேவை வழங்குநர் வழங்கும் வழிகாட்டுதலே போதுமானது.
* உயிலின் சிக்கலான தன்மை மற்றும் சேவை வழங்குநரைப் பொறுத்து விலை மாறுபடும்.
* பாரம்பரிய முறையைப் போலவே, ஆன்லைன் உயிலுக்கும் இரண்டு சாட்சிகளின் கையெழுத்து கட்டாயம்.
* ஆன்லைன் முறை பயன்படுத்துவதால், பொதுவாக ஏற்படும் தவறுகள் பெரும்பாலும் குறையும்.
* எழுதும் போதும், எழுதி முடித்த பிறகும், பிழைகள் இருந்தால் எளிதில் திருத்திக்கொள்ள முடியும்.
* ஆன்லைன் உயில் சேவைகள், மக்கள் தங்களது சொத்துகளை பாதுகாப்பாகவும் தெளிவாகவும் வாரிசுகளுக்கு சென்றடைய உதவுவதால், தற்போது அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.
ஆன்லைன் உயிலில் ஏற்படும் முக்கிய சிக்கல்கள்: ஆன்லைன் உயில் எழுதுதல் எளிமையான, சிக்கலற்ற முறையாக இருந்தாலும், சில சமயங்களில் அது சரியான தேர்வாக இருக்காது. குறிப்பாக பெரிய அளவிலான சொத்துகள் அல்லது சிக்கலான குடும்ப சூழ்நிலைகள் இருந்தால் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
* ஆன்லைன் முறையில் சட்ட ஆலோசனை கட்டாயம் இல்லை என்றாலும், சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெற்றால் மட்டுமே உயில் சட்டரீதியாக வலுவானதும் பிழையற்றதுமானதாக இருக்கும்.
* நிலங்கள், வணிக சொத்துகள், பல உரிமையாளர்கள் கொண்ட சொத்துகள் போன்ற பெரிய அளவிலான சொத்துகளை ஆன்லைன் உயிலில் சேர்ப்பது சிரமமாகும்.
* வாரிசுகள் பலர் இருக்கிறார்கள், சொத்து பங்கீடு தொடர்பாக கருத்து மோதல்கள் உள்ளன, இரண்டாவது திருமணம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளில் ஆன்லைன் உயில் சரியானதாக இருக்காது.
* உயில் எழுதுவதற்கு முன், தனிநபர் தன் குடும்ப அமைப்பு, சொத்து விவரம் மற்றும் எதிர்கால சூழ்நிலைகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
* மொத்தத்தில், ஆன்லைன் உயில் ஒரு எளிய வசதி என்றாலும், அனைவருக்கும் அது பொருத்தமாக இருக்காது. அதனால், தனிநபர் தன் தேவைகள் மற்றும் சூழ்நிலைகளை முதலில் கவனத்தில் எடுத்துக்கொள்வது மிக அவசியம்.
கவனிக்க வேண்டியவை: ஆன்லைனில் உயில் தயாரிப்பது எளிதான நடைமுறையாக மாறியுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் துல்லியம் தொடர்பாக சில கவனிப்புகள் அவசியமாகின்றன. நம்பகமான சேவையை தேர்வு செய்து சரியான விவரங்களைப் பதிவு செய்வது உயிலின் சட்டப்பூர்வத்தன்மையை நேரடியாக பாதிக்கும். ஆன்லைனில் உயில் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு..
* பயன்படுத்தும் தளம் பாதுகாப்பானதா, நம்பத்தகுந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* URL “https://” என தொடங்குகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இது தகவல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
* Login விவரங்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். உயிலில் பின்னர் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின், உங்கள் கணக்கு விவரங்கள் மிகவும் உதவும்.
துல்லியமான தகவல்கள் அவசியம்:
- முழுப்பெயர்
- முகவரி
- சொத்து விவரங்கள்
- முதலீடு தொடர்பான தகவல்கள்
- வங்கி கணக்குகள்
- அனைத்து சொத்துகளின் முழுமையான பட்டியல்
- இவையனைத்தையும் பிழையில்லாமல் பதிவு செய்ய வேண்டும்.
Read more: ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா? சத்தமே இல்லாமல் ட்ரம்ப் செய்து வரும் சம்பவம்!



