பெங்களூரு கேஜி ஹள்ளியில் உள்ள பில்லண்ணா கார்டனைச் சேர்ந்தவர் ரேணுகா. திருமணமான இவருக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் கணவருடன் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தார். தனியாக வசித்து வந்த ரேணுகாவுக்கு, பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அம்பேத்கர் என்கிற குட்டா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நட்பு, நாளடைவில் நெருக்கமான காதலாக மாறியது. குட்டா, ரேணுகாவைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியதால், இருவரும் நெருங்கிப் பழகி, ரேணுகாவின் வீட்டிலேயே உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்நிலையில், ரேணுகா தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி குட்டாவைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால், குட்டா ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் திருமணத்தைத் தள்ளிப்போட்டுள்ளார். ஒரு கட்டத்தில், ‘தன்னைக் காதலிப்பது டைம் பாஸுக்காகவா? உடனடியாக திருமணம் செய்துகொள்’ என்று கள்ளக்காதலி ரேணுகா அழுத்தம் கொடுத்ததால், குட்டாவுக்குக் கோபம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ரேணுகாவை வழிமறித்த குட்டா, தனியாகப் பேச வேண்டும் என்று கூறி, பில்லண்ணா கார்டனில் உள்ள அரசுப் பள்ளி அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மீண்டும் திருமணம் செய்யும்படி ரேணுகா வலியுறுத்தவே, ஆத்திரமடைந்த குட்டா, தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை எடுத்து ரேணுகாவை சரமாரியாக 6 முறை குத்திவிட்டுத் தப்பியோடினார்.
பின்னர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ரேணுகாவை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், தீவிர சிகிச்சை பலனின்றி ரேணுகா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரேணுகாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கேஜி ஹள்ளி போலீசார் குட்டா மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



