அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில், தற்போது அந்தக் குழுவின் பெயரில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இந்த அமைப்பு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு சார்பில், டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்திற்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ், அடுத்ததாக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பது குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், அரசியல் வட்டாரத்தில் இக்கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.



