ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்போது, உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தியன் ரயில்வே ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓடிபி கட்டாயம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
நீண்ட தூரப் பயணங்களுக்குப் பெரும்பாலான மக்கள் ரயிலையே நம்பி உள்ளனர். குறிப்பாக பண்டிகை காலங்களில், முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. இதனால் அவசர தேவைகளுக்காக செல்பவர்களுக்கு வழங்கப்படும் தட்கல் டிக்கெட் முன்பதிவிலும் கூட பலருக்கு டிக்கெட் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வந்தது.
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, டிக்கெட் இருப்பது போல காட்டினாலும், பணம் செலுத்தும் நிலைக்கு வருவதற்குள் டிக்கெட் காலியாகிவிடுவதாக பயணிகள் பலரும் புகார் தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில், பயணிகளின் புகாரை அடுத்து ரயில்வே இந்த ஓடிபி சரிபார்ப்பு முறையை கொண்டு வந்துள்ளது.
எப்படி செயல்படும்..?
தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கு புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகம் செய்துள்ள இந்தியன் ரயில்வே, இனி டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியின் செல்போன் எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல் எண்ணை உள்ளீடு செய்த பின்னரே டிக்கெட் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த ஓடிபி சரிபார்ப்பு முறை, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மட்டுமல்லாமல், ரயில்வே முன்பதிவு கவுண்டரில் புக் செய்யப்படும் தட்கல் டிக்கெட்டுக்கும் பொருந்தும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இடைத்தரகர்கள் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுத்து, பயணம் செய்ய வேண்டிய உண்மையான நபர்களுக்குத் தேவையான நேரத்தில் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யும்.
எந்த ரயிலில் முதலில் அறிமுகம்..?
ஓடிபி கோரும் வசதி, முதற்கட்டமாக மும்பை சென்ட்ரல் – அகமதாபாத் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12009/12010) ரயிலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பின்னர், படிப்படியாக இந்த வசதியானது மற்ற வழித்தட ரயில்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் தெற்கு ரயில்வேயிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : இரவில் குளித்துவிட்டு தூங்கச் செல்பவரா நீங்கள்..? அப்படினா இந்த செய்தி உங்களுக்குத்தான்..!!



