தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் தொழில், அரசியல், தனியார் மற்றும் அரசுப் பணிகளில், ஆண்களுக்கு இணையாக பல்வேறு பொறுப்புகளில் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். பல்வேறு அத்துமீறல்கள், சவால்கள் மற்றும் தடைகளைத் தகர்த்து, அவற்றைச் சாதனைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுகின்றனர். மேலும், பணிக்குச் செல்லும் பெண்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, பணியிடத்தில் ஏற்படும் சவால்களையும் சமாளித்து வாழ்க்கையில் உயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களின் நலனை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில், கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது பிரசவங்களுக்கு, 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த விடுப்பு பெற, ஊழியர் கடந்த 12 மாதங்களுக்குள் நிறுவனத்தில் குறைந்தது 80 நாட்கள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். இது ஒருபுறம் இருக்க, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு மாதவிடாய் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு மற்றும் ஐடி உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு ஏற்ப, ஒரு மாதம் ஒரு முறை அல்லது ஒரே நேரத்தில் என மொத்தம் 12 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். பெண்களின் நலனை சிந்திக்கும் ஒரு முற்போக்கான அரசின் பெருமைக்குரிய விஷயம் இது என்றும் கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் மாதந்தோறும் இரண்டு நாட்களும், பீகார் மற்றும் ஒடிசாவில் ஆண்டுக்கு 12 நாட்களும் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த விதிமுறை அம்மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன் மூலம், மாதவிடாய் விடுப்பை அமல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஒடிசா, கேரளா மற்றும் சிக்கிம் ஆகியவற்றுடன் தற்போது கர்நாடகாவும் இணைந்துள்ளது. அண்டை மாநிலங்கள் பெண்களின் உடல்நலனில் அக்கறை கொண்டு இந்த முற்போக்கான விடுமுறையை அமல்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே வலுவாக எழுந்துள்ளது.