இந்திய சினிமாவில் சுமார் 130 படங்களில் ஜோடியாக நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பழம்பெரும் நடிகை யார் என தெரியுமா..? அவர் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை ஷீலா. இவர், ‘சந்திரமுகி’ படத்தில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரேம் நசீர். இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 130 படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். இவர்கள் இணைந்து நடித்த முதல் படம் ‘காட்டுமைனா’.
இப்படம் கடந்த 1963ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் தொடர்ந்து பல ஆண்டுகள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர். இந்த ஜோடியை ரசிகர்களும் பெரிதும் விரும்பினர். இதுவரை இந்திய சினிமாவில் யாரும் இந்த அளவுக்கு ஒன்றாக சேர்ந்து படங்களில் நடித்தது இல்லை. இதனால், இவர்களின் சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் ஜோடி சேர்ந்த “செம்மீன்”, “கள்ளிச்செல்லம்மா”, மற்றும் “வேலுத்த கத்ரீனா” ஆகிய படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகை ஷீலா மார்ச் 24, 1948 அன்று கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தார். இவர் 13 வயதில் இருந்தே நடிக்க தொடங்கினார். இவரை நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் தான் முதன்முதலில் நாடகத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். கடந்த 1962ஆம் ஆண்டு தனது 17-வது வயதில் எம்ஜிஆர் நடித்த “பாசம்” என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதே ஆண்டில் மலையாள சினிமாவிலும் அறிமுகம் ஆனார். இவர், தெலுங்கில் என்டிஆருடனும் நடித்துள்ளார். இதன் மூலம் 2 முதல்வர்களுடன் நடித்து பெருமை பெற்றார். தனது சிறந்த நடிப்பு மற்றும் நிதானத்தால் விரைவாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் 475-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், கடந்த 1983ஆம் ஆண்டு நடிப்பில் இருந்து ஷீலா ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவர் ஊட்டியில் தான் வாழ்ந்து வந்தார். இதையடுத்து, 2003ஆம் ஆண்டு, “மனசினகரே” என்ற படத்தின் மூலம் அவர் மீண்டும் பிரமாண்டமாக திரையுலகில் நுழைந்தார். இரண்டு ஆண்டுகளுக்குள் தனது திறமை ஒருபோதும் மங்காது என்பதை நிரூபித்துக் காட்டினார். “அகலே” (2005) படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். அதே ஆண்டு ‘சந்திரமுகி’ படத்தில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : BREAKING | தமிழ்நாடே எதிர்பார்த்த தீர்ப்பு..!! அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி..!!