பாகிஸ்தான் நடிகை ஹுமைரா அஸ்கர் 32 வயதில் காலமானார், அவரின் வீட்டில் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது.
பாகிஸ்தானிய நடிகையும் மாடலுமான ஹுமைரா அஸ்கர் அலி, நேற்று கராச்சியின் உயர்ரக பாதுகாப்பு வீட்டுவசதி ஆணையத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார். 32 வயதான அவரது உடல், அழுகிய நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஹுமைராவின் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹுமைரா வாடகை செலுத்தாததாலும் அவரை தொடர்பு கொள்ள முடியாததாலும் அவர் வீட்டு உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற என உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து இத்தேஹாத் வணிகப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட கிஸ்ரி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி காவல்துறை அதிகாரிகள் பிற்பகல் 3:15 மணியளவில் அங்கு சென்றனர். அவரின் வீட்டில், எந்த பதிலும் கிடைக்காததால், பூட்டிய அடுக்குமாடி குடியிருப்பை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது கடும் துர்நாற்றம் வீசியது. அப்போது தான் நடிகை ஹுமைரா இறந்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
தொடர்ந்து குற்றவியல் காட்சிப் பிரிவைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் சாட்சியங்களை சேகரிக்க வரவழைக்கப்பட்டனர், மேலும் ஹுமைராவின் உடல் மருத்துவ மற்றும் சட்ட நடைமுறைகளுக்காக ஜின்னா முதுகலை மருத்துவ மையத்திற்கு (JPMC) கொண்டு செல்லப்பட்டது. JPMC-யின் காவல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சம்மையா சையத், மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
நடிகை மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது, மேலும் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்.
ஹுமைரா வாடகை குடியிருப்பில் தனியாக வசித்து வந்ததாகவும், பல மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் போன் பதிவுகள் மூலம் அவரது உறவினர்களைக் கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
ஹுமைரா அஸ்கர் ARY-யின் ரியாலிட்டி ஷோவான தமாஷா கர்-ல் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். பின்னர் 2015 ஆம் ஆண்டு வெளியான ஜலைபீ திரைப்படத்தில் ஒரு வேடத்தில் நடித்தார். நடிகை,மாடல் ஒரு நாடகக் கலைஞர், ஓவியர், சிற்பி என பன்முகத்திறமை கொண்டவர் ஆவர். அவருக்கு இன்ஸ்டாவில் 713,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருந்தனர். செப்டம்பர் 30, 2024 அன்று கடைசியாக அவர் தனது போட்டோக்களை பதிவிட்டிருந்தார்.. அதன்பிறகு அவர் எந்த போட்டோக்களையும் பதிவிடவில்லை..
Read More : நடிகை ஆலியா பட்டின் முன்னாள் PA கைது.. ரூ. 76 லட்சத்தை திருடியது அம்பலம்..