பாகிஸ்தான் ராப் பாடகர் தல்ஹா அஞ்சும், சமீபத்தில் தனது இசை காரணமாக இல்லாமல், வேறு காரணத்திற்காகவே செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். நேபாளில் நடந்த தனது கச்சேரி ஒன்றில் அவர் இந்தியக் கொடியை அசைத்தது தொடர்பான சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. அந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்தியா–பாகிஸ்தான் ரசிகர்களிடையே பாராட்டுகளையும் கடும் எதிர்ப்புகளையும் ஒரே நேரத்தில் உருவாக்கியுள்ளது.
வைரலான கச்சேரி தருணம்
உருது ராப் பாடல்களுக்காக பிரபலமான, கராச்சியை சேர்ந்த 30 வயது தல்ஹா அஞ்சும், ரசிகர் ஒருவர் கொடுத்த இந்தியக் கொடியை எடுத்துப் பறக்கவைத்து, தொடர்ந்து அதைத் தோளில் போர்த்திக்கொண்டு பாடல் பாடினார். இந்த செயல் பாகிஸ்தானின் சமூக வலைதளங்களில் சிலரிடமிருந்து உடனடியாக எதிர்ப்பை ஏற்படுத்தியது. அவரை “நாட்டுக்கு மரியாதை இல்லாதவர்” என்று குற்றம்சாட்டினர்.
வைரலான அந்த வீடியோவில், அஞ்சும் தனது முதுகில் இந்தியக் கொடியை போர்த்திக்கொண்டு பாடும் போது கூட்டம் ஆர்ப்பரித்து உற்சாகப்படுத்தும் காட்சிகள் தெளிவாக காணப்படுகிறது. அந்த காட்சி இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் வேகமாக பரவியதுடன், இருநாடுகளின் நெட்டிசன்களிடமிருந்து பல்வேறு கருத்துகள் குவிந்தன.
இந்த நிகழ்வை தொடர்ந்த கடும் எதிர்ப்பை குறித்து தல்ஹா அஞ்சும் நேரடியாகத் தெரிவித்தார். X தளத்தில் பதிவிட்ட அவர் “என் இதயத்தில் வெறுப்புக்கு இடமில்லை. என் கலைக்கு எல்லைகளே கிடையாது. நான் இந்தியக் கொடியை உயர்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தால் அது பரவாயில்லை. மீண்டும் அதையே செய்வேன். ஊடகம், போரைத் தூண்டும் அரசுகள், அவற்றின் பிரசாரங்கள் — இவை எதையும் நான் கவலைப்பட மாட்டேன். உருது ராப் என்பதும் எப்போதும் எல்லையற்றதே.” என்று குறிப்பிட்டுள்ளார்.. அவரின் இந்த கருத்துகள் மேலும் விவாதத்துக்கு வழிவகுத்தன.
தல்ஹா அஞ்சும் – எழுச்சியின் கதை
தல்ஹா அஞ்சும் முதலில் பிரபலமானது யங் ஸ்டன்னர்ஸ் (Young Stunners) என்ற ஹிப்-ஹாப் ஜோடியின் ஒரு பகுதியாகும். தல்ஹா யூனுஸ் உடன் இணைந்து பள்ளிப் பருவத்திலேயே இசைப் பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் Burger-e-Karachi, Maila Majnun, Laam Sai Chaura போன்ற பாடல்களால் பாகிஸ்தானின் உருது ராப் கலாச்சாரத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கினார்.
காலப்போக்கில், தல்ஹா அஞ்சும் தனிப்பாடகராகவும் தனித்துவமான இடத்தைப் பிடித்தார். அவரின் 2021 வெளியீடுகள்.. Gumaan, Afsanay, மேலும் PSL க்கான Groove Mera போன்றவை.. தென் ஆசிய ராப் ரசிகர்கள் மத்தியில் அவரை வீட்டு பெயராக மாற்றின.
மேலும் 2024 இல் வெளியான Kattar Karachi திரைப்படத்தின் மூலம் அவர் தனது சினிமா அறிமுகத்தையும் செய்தார், இதன் மூலம் தனது கலைச் சென்றடையும் வட்டத்தை மேலும் விரிவாக்கினார்.
தொடரும் சர்ச்சை
தல்ஹா அஞ்சுமின் இசைக்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக சர்ச்சையில் சிக்கியது இது முதல்முறையல்ல. ரசிகர்களின் ஒழுங்கற்ற நடத்தை காரணமாக மேடையில் பாடிக்கொண்டிருந்தபோதே நடுவில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சம்பவங்களும் அவருக்குண்டு. மேலும், சமூக வலைதளங்களில் அவர் திறம்பட கருத்துகளை பகிரும் தன்மை காரணமாகவும் பல்வேறு சர்ச்சைகள் அடிக்கடி எழுகின்றன.
Read More : ஷேக் ஹசீனாவின் மரண தண்டனைக்கு இந்தியாவின் பதில் : ‘ஆக்கபூர்வமாக ஈடுபடுவோம்’



