தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் தனித்துவமான பெயர்களில் மாரியம்மன் அருள்பாலித்து வருகிறார். பொதுவாக ஆடி மாதத்தில் மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. அப்படியான சிறப்புடைய கோயில்களில் ஒன்றாகும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நஞ்சை மகத்து வாழ்க்கை கிராமத்தில் அமைந்த பனங்காடு மாரியம்மன் கோயில்.
கோயிலின் வரலாறு: இந்த இடம் முன்பு “பாணிகாடு” என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் குடிநீர் எடுக்க சுனை வெட்டி பிற பகுதிகளுக்கு கொண்டு சென்றதால், பாணி (தண்ணீர்) காடு என்ற பெயர் பிற்காலத்தில் பனங்காடு என மாறியது. இங்கு அம்பலவாணன் படையாட்சி என்ற நலனாளர் முதன்முதலாக சிங்கப்பூர் சென்று பொருள் ஈட்டி, ஊரில் கோயில் இல்லாததால் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்துடன் தன் சொந்த செலவில் இந்த மாரியம்மன் கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு சிங்கப்பூரார் கோயில் என அழைக்கப்பட்ட இந்த கோயிலில் பிரார்த்தனை செய்த பிறகு பலருக்கும் வெளிநாடு சென்று வேலை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இதனால் அவ்வாறு சென்றவர்கள் திருவிழா காலங்களில் விழா சிறக்க இன்றளவும் உதவி வருகின்றனர். அம்பலவாணன் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பத்தினர்கள் கோயிலை கண்காணித்து வந்தனர்.
கோயில் அமைப்பு:
- மூலவர் – மாரியம்மன்
- உற்சவர் – பொய்யா மொழி விநாயகர்
- தல விருட்சம் – வேப்பமரம்
- தீர்த்தம் – குளத்து தீர்த்தம்
- அருகில் 30 அடி தொலைவில் யோக விநாயகர் சன்னதி உள்ளது.
- பேச்சியம்மன், துர்க்கை ஆகிய தேவியரும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.
கோவில் சிறப்புகள்: இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்தவர்கள் பலர் வெளிநாடு சென்று வேலை பெற வாய்ப்பு பெற்றதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாத முதல் வாரத்தில், மாரியம்மன் மற்றும் விநாயகர் சிலை மீது சூரிய ஒளி படுவது விசேஷம். குழந்தைப்பேறு, திருமணத் தடைகள் நீங்க, நோய் குணமடைய, வெளிநாடு செல்ல விரும்புவோர் இங்கு வழிபடுகின்றனர். நேர்த்திக்கடனாக ஆடு, கோழி, புறா முதலியன உயிருடன் செலுத்தப்படும் பழக்கம் உள்ளது.
Read more: கடக ராசியில் சுக்கிரன்.. இந்த ஐந்து ராசிக்கு பண பிரச்சனையே வராது..!! லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா..?



