பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக்கோரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை பள்ளிக்கல்வித் துறை முன்னெடுக்க உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் வழக்கமாக ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளைப் போன்று முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை இன்று மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
மேலும், “அரசு பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் அனைத்து மாவட்டங்களிலும் வாகனப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வாகனப் பேரணியை தொடங்கி வைக்கிறார். வரும் 28ஆம் தேதி வரை இந்தப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.