திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சதீஷ் (41) – மீனா (38) தம்பதியினரின் மகன் ஹரிஹரன் (13) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சதீஷ் மற்றும் மீனா தம்பதியரின் உறவினரான ஆந்திராவைச் சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்திற்காக சில நாட்களுக்கு முன் சதீஷின் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். அப்போது குழந்தையைத் தூங்க வைக்க, வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில் ஒரு சேலையால் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. நந்தினி தனது சொந்த ஊருக்குச் சென்ற பிறகும், அந்தத் தொட்டிலைக் கழட்டாமல் இருந்த நிலையில், சிறுவன் ஹரிஹரன் அதில் விளையாடுவது வழக்கமாக இருந்துள்ளது.
சம்பவத்தன்று மாலை, சதீஷ் தனது மகன் ஹரிஹரனைப் பள்ளியில் இருந்து ஆட்டோவில் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு, மீண்டும் சவாரிக்குச் சென்றுவிட்டார். மீனா, தனது மகள் பவ்யஸ்ரீயுடன் (10ஆம் வகுப்பு மாணவி) அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். இதனால், சிறுவன் ஹரிஹரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.
வழக்கம் போலவே, ஹரிஹரன் மாடியில் இருந்த சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் முறுக்கிக் கொண்டு, சிறுவனின் கழுத்தை இறுக்கியதால் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தான்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பி வந்த தாய் மீனா, மகன் தொட்டிலில் தொங்கிய நிலையில் கழுத்து இறுக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஹரிஹரனை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஹரிஹரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்தபோது தொட்டிலில் விளையாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



