சென்னை கோயம்பேடு மொத்தச் சந்தையில், அத்தியாவசியக் காய்கறிகளான தக்காளி மற்றும் முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக, முருங்கைக்காய் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மழை மற்றும் பனிக்காலம் காரணமாக வரத்துக் குறைந்ததுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
உச்சம் தொட்ட முருங்கை விலை :
தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக முருங்கைக்காய் வரத்து மிகவும் குறைந்த நிலையில், அதன் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. கோயம்பேடு மொத்தச் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ₹400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் இதன் விலை ₹450 வரை விற்கப்படுகிறது.
தக்காளி விலையும் உயர்வு :
முருங்கைக்காயுடன் சேர்த்து தக்காளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்தச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ₹70க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் இது ₹90 வரை விற்பனையாகிறது.
இதேபோல, கடலூர் மாவட்டத்திலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. அங்கு மொத்த விற்பனைக் கடையில் ஒரு கிலோ தக்காளி ₹54க்கும், சில்லறை விற்பனையில் ₹60 முதல் ₹65 வரையிலும் விற்பனையாகிறது. பனிக் காலம் நீடிக்கும் பட்சத்தில், காய்கறி வரத்து மேலும் குறைந்து, விலைகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



