மழைக் காலங்களில் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலால் ஏற்படும் தொந்தரவுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், இதற்காக பெரும்பாலான நேரங்களில் இருமல் மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று குழந்தை நல மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு தெளிவான அறிவுரையை வழங்கியுள்ளனர்.
குழந்தைகள் நல மருத்துவர்கள் தரப்பில் இருந்து வெளியாகி உள்ள தகவலின்படி, பெரும்பாலான இருமல் மருந்துகளில் பலதரப்பட்ட ரசாயன மூலக்கூறுகள் கலந்தே தயாரிக்கப்படுகின்றன. இவற்றால் இருமலுக்கு முழுமையான தீர்வு கிடைக்குமா என்பது உறுதியற்றது. மேலும், இந்த மருந்துகளால் சில சமயங்களில் குழந்தைகளுக்கு மார்பு வலியோ அல்லது வேறு உடல் அசௌகரியங்களோ கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த உண்மைகளை பற்றி அறியாமல், பலர் சர்வ சாதாரணமாக மருந்துக் கடைகளில் இருமல் மருந்துகளை வாங்கிச் சிறு குழந்தைகளுக்குக் கொடுப்பது தவறு என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக, இருமல் மருந்துகளை எடுக்காமலேயே, குழந்தைகள் தங்கள் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தி மூலம் விரைவிலேயே உடல்நலம் தேறிவிடுகிறார்கள். எனவே, குழந்தைகளைப் பொறுத்தவரை, குறிப்பாக சிறிய வயது குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பெரும்பாலும் தவிர்ப்பதே நல்லது என மருத்துவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.



