முந்தைய தலைமுறையினரிடம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் வயதானவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில், இவையெல்லாம் வயதைக் கடந்து, குழந்தைகளின் வாழ்க்கையில் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளன. பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யும் போது கூட, சிலரிடம் இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு அதிகம் போன்ற அறிகுறிகள் தென்படும் நிலைக்கு நாம் வந்து விட்டோம்.
குழந்தைகள் இன்று உணவாக சாப்பிடுவது பழங்கள், காய்கறிகள் அல்ல. அதற்கு பதிலாக, சிற்றுண்டிகள், குளிர் பானங்கள், அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்புகள் கொண்ட ஜங்க் ஃபுட்கள்தான் விரும்பு சாப்பிடுகின்றனர். பிளாஸ்டிக் கவரில் வரும் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள், பீட்சா, பர்கர்கள் போன்றவை இன்று குழந்தைகளின் அடிப்படை உணவாகிவிட்டன. மேலும், போதிய உடற்பயிற்சி இல்லாததால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 நீரிழிவுக்கான வாய்ப்பு குழந்தை பருவத்திலேயே உருவாகிறது.
முன்னைய தலைமுறையில் குழந்தைகள் வீதிகளில் ஓடிக்கொண்டே வளர்ந்தார்கள். கால்பந்து, சைக்கிள், பம்பரம் என உடல் பங்கேற்பும், வியர்வையும் அதிகம் இருந்தன. ஆனால் தற்போது அப்படி இல்லை. குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் செல்போன் அல்லது டிவியில் மூழ்கி விடுகின்றனர். இதனால், உடல் எடை அதிகரிப்பு, மெட்டபாலிசம் குறைவு, ரத்தத்தில் சர்க்கரை அளவின் கட்டுப்பாடில்லாத உயர்வு ஆகியவை ஏற்படுகின்றன.
அதேபோல், குழந்தைகள் சாப்பிடும் உணவுகளில் பெற்றோர் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். குழந்தைகள் கேட்கும் உணவுகளை அனுமதிப்பதால், அவர்களுக்கு எதிர்காலத்தில் பல உடல்நலப் பிரச்சனைகள் வருகின்றன. அதிக எடை கொண்டிருப்பது குழந்தைகளுக்கு சின்ன வயதில் கியூட் ஆகத்தான் இருக்கும்; ஆனால், அது மருத்துவ ரீதியாக பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் ஒரே நாளில் உண்டாவது அல்ல. காலப்போக்கில், தவறான பழக்கங்கள், சீரற்ற உணவு, உடற்பயிற்சி குறைவு, மன அழுத்தம் போன்றவற்றின் காரணமாக ஏற்படும். எனவே, குழந்தைகளின் தினசரி உணவில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை கட்டுப்படுத்த வேண்டும். குழந்தைகளை இயற்கை உணவுகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும்.
தினசரி உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். மொபைல், டிவி பார்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும். மனநலம் பற்றி குழந்தைகளுடன் பெற்றோர்கள் உரையாட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.